ஜெய் பீம் திரைப்படத்தின் கலைஞர்கள் களப்போராளிகளுக்கு சிபிஐ (எம்) சார்பில் இன்று (04.1.2022) பாராட்டு விழா!
கடலூர் மாவட்டம், கம்மாபுரத்தில் காவல் சித்திரவதையால் கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவின் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட “ஜெய்பீம்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து சாதனை படைத்ததுடன், மறைக்கப்பட்ட இருளர் – பழங்குடியினர் வாழ்க்கை நிலைமைகளை வெளியுலகிற்கு வெளிக்கொணர்ந்துள்ளது.
படிநிலையில் வாழும் பட்டியலின மக்களின் சமூக வாழ்நிலை மாற்றத்தை நோக்கி இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் திரு. த.செ. ஞானவேல், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர், கலை இயக்குநர் கதிர், இசையமைப்பாளர் சேன் ரோல்டன், திரைக்கலைஞர்கள் மணிகண்டன், தமிழரசன், பவா செல்லத்துரை, இரா. காளீஸ்வரன் உள்ளிட்டவர்களை பெருமைபடுத்தும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 4.1.2022 அன்று மாலை 5.00 மணிக்கு சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
இத்திரைப்படத்தின் கலைஞர்கள், களப்போராளிகளை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், பி. சம்பத், உ. வாசுகி, டி. ஆறுமுகம் உள்ளிட்ட தலைவர்கள் சிறப்புரையாற்றுகின்றனர்.
இவ்விழாவில் மறைந்த ராஜாக்கண்ணு மனைவி திருமதி பார்வதி, நீண்ட, நெடிய சட்டப்போராட்டங்களை நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் முதனை ஆர். கோவிந்தன், ஆர். ராஜ்மோகன், வழக்கறிஞர் அ. சந்திரசேகரன் உள்ளிட்ட களப்போராளிகளும் கலந்து கொள்கின்றனர். அதற்கான அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிகளுக்கு தங்களின் மேலான நிறுவனத்தின் சார்பில் செய்தி நிருபர், ஒளி / ஒலி/ புகைப்பட நிருபர்களை அனுப்பி வைத்து செய்தி சேகரித்து பிரசுரித்திட கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
தங்களன்புள்ள,
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்