தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு போட்டியில் டைட்டில் வென்ற தினேஷ்குமார்
தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு போட்டி ; இறுதிச்சுற்றில் ஆனந்த் ராகவை வென்ற தினேஷ்குமார்
டென்பின் பந்துவீச்சு போட்டியில் வென்ற தினேஷ்குமாருக்கு பரிசு வழங்கி கௌரவித்த மஹத் ராகவேந்திரா
தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு சங்கம் சார்பில் முதன்முதலாக ஆண்களுக்கான மாநில தரவரிசையிலான டென்பின் பந்துவீச்சு போட்டி ஏப்ரல்-7 முதல் 10ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் மார்ஷல் சாலையில் உள்ள டியூ பவுலில் (DU Bowl) நடைபெற்றது
மொத்தம் 32 ஆண் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். மூன்றில் சிறந்தது (Best of 3) என்கிற அடிப்படையில் நடத்தப்பட்ட இறுதிப்போட்டியில் தினேஷ் குமார் சக போட்டியாளரான ஆனந்த ராகவை 2-1 என்கிற கணக்கில் தோற்கடித்தார்
ஆரம்பத்தில் நிலையாக விளையாடிய ஆனந்த் ராகவ், இந்த மூன்று போட்டிகளில் முதல் போட்டியில் தினேஷூக்கு எதிராக 187-172 என்கிற கணக்கில் வெற்றி பெற்றார். ஆனால் இரண்டாவது போட்டியில் சுதாரித்துக்கொண்ட தினேஷ் , 200-157 என்கிற புள்ளிகள் கணக்கிலும், இறுதிப்போட்டியில் 182-146 என்கிற புள்ளிகள் கணக்கிலும் தொடர்ந்து வெற்றி பெற்று ஆனந்த்தை தோற்கடித்து டைட்டிலை வென்றார்
இதேநாளில் முன்னதாக முதல் அரையிறுதிப் போட்டியில் மூன்றில் எது சிறந்தது (Best of 3) என்பதை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட போட்டிகளில் யூசுப் சபீர் மற்றும் ஆனந்த ராகவ் இருவரும் ஆளுக்கு ஒரு முறை வென்றனர், மூன்றாவது போட்டியில் இருவருமே 191 புள்ளிகள் எடுத்திருந்த நிலையில் ஒன் பால் ரோல் ஆப் (One ball roll off) முறையில் வெற்றியாளர் யார் என்பதை தேர்வு செய்தனர் அந்த வகையில் ஆனந்த் ஒருமுறை பந்தை எறிந்ததில் 9 புள்ளிகளை ஸ்கோர் செய்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்
அதேபோல இரண்டாவது அரையிறுதி போட்டியில் தினேஷ்குமார் மற்றும் சபீர் தாங்கெட் இருவரும் மோதியதில் முறையே 173-177, 174-138 மற்றும் 181-157 என்ற புள்ளிகள் கணக்கில் தினேஷ்குமார் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்
இதுதவிர ஆறு விளையாட்டுகள் கொண்ட தொகுதியில் மஹிபால் சிங் என்பவர் அதிகபட்ச சராசரியாக 209 புள்ளிகளும், 18 விளையாட்டுகள் கொண்ட தொகுதியில் அதிகபட்ச சராசரியாக யூசுப் சபீர் 192.33 புள்ளிகளும் பெற்று சிறப்பு பரிசுகளை பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் மஹத் ராகவேந்திரா போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்
தற்போது நடைபெற்றுள்ள போட்டிகளில் தரவரிசை புள்ளிகள் முதல் 16 பந்து வீச்சாளர்களுக்கு வழங்கப்படும்.. இந்த வருடம் நடைபெறுகின்ற மாநில தரவரிசை நிகழ்ச்சிகளில் பந்து வீச்சாளர்களால் பாதுகாக்கப்படும் இந்த தரவரிசை புள்ளிகள், இந்த வருட இறுதியில் நடைபெற இருக்கும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர்களை தேர்வு செய்வதற்கு மதிப்பிட பயன்படுத்தப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது,.