Statement from director Bharathiraja on behalf of TFAPA regarding an Appeal to Hon’ble Chief Minister
மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்!
தமிழகத்தில் பொதுமுடக்கம் தொடங்கி இன்றோடு 150 நாட்கள் ஆகிவிட்டது. எங்கள் திரைப்படங்கள் திரையரங்கில் 150 நாட்கள் ஓடி சாதனை புரிந்தால் அப்படியொரு மகிழ்வும் கொண்டாட்டமும் கொள்வோம்.
ஆனால் பட வெளியீடுகள் இன்றி திரையரங்கையும் மூடி… படப்பிடிப்புகளையும் நிறுத்தி, நூற்றைம்பது நாட்கள் ஆகிறது என்ற வேதனையை தமிழ்சினிமா முதன் முறையாக இப்போது சந்தித்துள்ளது.
80-க்கும் மேற்பட்ட படங்களும், படப்பிடிப்புகளும் தேங்கி நிற்கின்றது. கொரோனா காலகட்டத்தில் நாங்கள் முழுமையாக அரசாங்கத்தோடு நின்று எங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கிறோம்.
அரசு கொடுத்த வழிமுறைகளைப் பின்பற்றி எங்கள் முடக்கத்தை முழுமையாக செய்துவிட்டோம்.
எத்தனையோ ஏழைத் தொழிலாளிகளின் வயிறு பட்டினியாகக் கிடக்கிறது. தொழில் நுட்பக் கலைஞர்களின் சிறு சேமிப்புகள் கரைந்து, திரைத்துறை மீண்டு வரும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பணம் போட்ட தயாரிப்பாளர்கள், பண உதவி செய்தவர்கள் என எல்லோரும் முதலீட்டின் மீதான வரவை எதிர்பார்த்து, இழப்பு மேல் இழப்பை சுமந்துகொண்டிருக்கிறார்கள்.
முதலீடு போடும்போதே இழப்பு என்ற நிலை மிகக் கொடுமையானது. இந்நிலை தொடராமல் தடுத்து தமிழ் சினிமா மீண்டும் மூச்சுவிட தாங்கள் தயைகூர்ந்து வழிமுறைகளோடு கூடிய ஒரு வழிகாட்டலை திரைத்துறைக்கு வகுக்க கேட்டுக்கொள்கிறேன்.
சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அளித்த அனுமதியைப் போல எங்களுக்கும் குறுகிய குழுவோடு, பொது இடங்களில் இல்லாமல், ஸ்டுடியோ அல்லது வீடுகளுக்குள் திரைப்பட படப்பிடிப்புகளைத் தொடர வழிவகை செய்ய, ஆவண செய்யுமாறு அத்தனை தொழிலாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
நாளை நாட்டிற்கான சுதந்திர நாள். அந்நன்நாளன்று தங்களது சுதந்திர தின அறிக்கையில் எங்கள் திரைத்துறை சிக்கல்களுக்கான விடுதலையும் இடம்பெற வேண்டும் என விரும்புகிறோம்.
எப்படிப்பட்ட வழிமுறைகளை, விதிகளோடு தந்தாலும் நிச்சயம் அதிலிருந்து மீறாது, தவறாது சீராக அவற்றைக் கடைப்பிடித்து…
எம் பிள்ளைகள் கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்போடு பணிசெய்துகொள்வோம் என உறுதி கூறுகிறோம்.
தங்களின் மேலான ஏற்புகளையும், வழிகாட்டலையும், படப்பிடிப்பிற்கான அனுமதியையும் எதிர் நோக்கிக் காத்திருக்கிறோம்.
நன்றி!
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக,
உங்கள் பாசத்திற்குரிய,
இயக்குநர் பாரதிராஜா