*இயக்குநர் வேலுபிரபாகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்*: திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகினி பன்னீர்செல்வம் பேட்டி.

14
Header Aside Logo
“திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரன் வாணியர் செட்டியார் சமுதாயத்துக்கு எதிராக சேனல் விஷன் என்கிற  யூடியூப் சேனலில் மிகவும் இழிவாக  அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார் .அதனால் அந்தச் சமுதாய மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். பகுத்தறிவு  என்பது மக்களை நேர்வழியில் எடுத்துச் செல்வது என்று தான் இருக்க வேண்டும். இது போல் அருவருக்கத்தக்க வகையில் பேசுவதில் அல்ல.எங்களுக்கும் பெரியார் கொள்கைகள் உடன்பாடில்லை என்றாலும் நாங்கள் அது பற்றிப் பேசுவதில்லை .விமர்சிப்பதில்லை. உங்களுக்குக் கொள்கை எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அடுத்தவர் மனதைப் புண்படுத்தும்படி பேச யாருக்கும் உரிமை கிடையாது. சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுவதற்கும் விமர்சிப்பதற்கும் யாருக்கும் உரிமை கிடையாது.அப்படிச் செய்தால் அது அயோக்கியத்தனம். வேலு பிரபாகரனுக்கு எதிராக நாங்கள் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறோம். இதுபோன்று சுமார் 200 இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இப்படிச் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய வேலுபிரபாகரனைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து அவருக்குத் தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.” என்றார்.
அவரிடம்  திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது .
அப்போது பேசும்போது,
 “கொரோனா லாக்டவுன்  தொடங்கி 140 நாட்கள் ஆகிவிட்டன .திரையரங்கு உரிமையாளர்கள் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமமான நிலையில் உள்ளனர்.
அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாத நிலையாக இருக்கிறது. இதன் மூலம்  1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு திரையரங்கத்திற்கும் 25 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் படத்தயாரிப்புகள் இல்லாமல் சினிமா சார்பான இழப்பு என்றால் 3000 கோடி ரூபாய்  இருக்கும் என்று கூறுகிறார்கள்.
திரையரங்குகளை எப்போது திறப்பார்கள் என்று அரசு தரப்பில் இருந்து பதில் வரும் என்று நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் .இப்போது விமானங்கள் எல்லாம் இயங்க ஆரம்பித்து விட்டன. விமானத்தில் நெருக்கமாக அமர்ந்து தான் பயணம் செய்கிறார்கள். விமானத்தில்  வராத கொரோனா திரையரங்குகளில் மட்டும் எப்படி வரும்?திரையரங்கத்தில் ஏதாவது மாற்றம் செய்யச் சொன்னால் நாங்கள் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம். விமானத்தில் அவ்வளவு நெருக்கமாகப் பயணம் செய்யும் போது வராத கொரோனா திரையரங்கில் மட்டும் எப்படி வந்து விடும் என்று நினைக்கிறார்கள்? அரசு திரையரங்கங்களில் ஏதாவது மாற்றங்கள் செய்யச் சொன்னாலும் அதை நாங்கள் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம். விரைவில் திரையரங்குகள் திறப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழகஅரசைக் கேட்டுக் கொள்கிறோம் .அதற்கான பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். “என்றார்.
ஒட்டியில்  திரைப்படம் வெளியாவது பற்றிக் கேட்டபோது,
“மக்கள் திரையரங்கம் சென்று படம் பார்க்கத்தான் விரும்புவார்கள். அதுதான் அவர்களுக்குத்  திருப்தி அளிக்கும். திரையரங்கத்தில் படம் பார்க்கும்போது வரும் திருப்தி வேறு எந்த தளத்திலும் கிடைக்காது .வேறு வழியில்லாமல் இப்போது ஓடிடியில் பார்க்கலாம். ஆனால் அதுவே  ஒரு நிரந்தரமான தீர்வு அல்ல .திரையரங்கில் படம் பார்த்துவிட்டு நன்றாக இருந்தால் இரண்டாவது முறை வேண்டுமானாலும் ஓடிடியில் பார்க்கலாம். இதில் ஒரு முழு திருப்தி கிடைக்காது. ஓடிடியில் தமிழில் வெளியிடப்பட்ட இரண்டு படங்களும் தோல்வி அடைந்துள்ளன .நெட்ப்ளிக்ஸில் வெளியான படங்களும் படுதோல்வி .தமிழில் மட்டுமல்ல இப்படி இந்தியில் வெளியான படங்களும் படுதோல்வி அடைந்து இருக்கின்றன .
 திரையரங்கங்கள்தான் சினிமாவிற்கான ஒரே தளம் என்பது எல்லாருக்கும் தெரியும். மக்கள் ஓடிடியை ஆதரிக்க வில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.” என்றார்.
திரையரங்கம் கிடைக்காத சிறு படங்களுக்கு ஓடிடி ஒரு வாய்ப்பாக இருக்கிறது  என்று ஒரு பேச்சு இருக்கிறதே என்று கேட்டபோது ,
“சிறு படங்களுக்குத் திரையரங்கங்கள் கிடைப்பதில்லை என்று சொல்வது தவறான கருத்து.  பல நாட்களாக இந்தப் பொய்யைச் சொல்லி வருகிறார்கள் . இது மிகவும் தவறான கருத்து . சென்ற ஆண்டு வெளியான 240  படங்களில் 200 படங்கள் சிறு படங்கள்தான். தமிழ்நாட்டில்  1070 திரையரங்குகள்தான் உள்ளன.சென்ற ஆண்டு 240 தமிழ்ப் படங்கள் வெளியாகியிருக்கின்றன. நேரடித் தமிழ்ப் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்குப் படங்கள் , நேரடி ஆங்கிலப் படங்கள், ஆங்கில டப்பிங் படங்கள், மலையாள, இந்திப் படங்கள் என்று வெளியாகி உள்ளன. இப்படியிருக்கும்போது திரையரங்கம் கிடைக்கவில்லை என்பது பொருத்தமில்லாத வாதம் தானே?  இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக திரையரங்குகளை அதிகரிக்க வேண்டும். பெரிய திரையரங்குகளை இரண்டாகவோ மூன்றாகவோ மாற்றி அமைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து சில ஆண்டுகளாகக் காத்திருக்கிறோம்.
ஓடிடியில் வெளியிட்ட சிவகுமார் குடும்பத்துப் படங்களை வெளியிடுவதில்லை என்று முடிவெடுத்ததாக பேசப்படுகிறது. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற போது,
 ”  ஓடிடியில் அவர்கள் படம் வெளியிட முடிவு எடுத்தபோது,எங்கள் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைப்படாமல் இப்படிச் செய்யும்போது நாங்கள் அதிலேயே வெளியிட்டுக் கொள்ளட்டும் என்று தான் சொன்னனோம். அப்போது அவர்களுக்கு நாங்கள் திரையரங்குகள் கொடுக்க மாட்டோம் என்று சொல்லவில்லை. சிவகுமார் குடும்பத்துப் படங்களை அந்த பிளாட்பாரத்திலேயே  வெளியிட்டுக் கொள்ளட்டும். இதுதான் எங்கள் நிலை” என்று கூறினார்.
ரோகினி ஆர் .பன்னீர்செல்வம் தமிழ்நாடு வாணியர் சங்கம் சங்கத்தின் நிறுவனத் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது தமிழ்நாடு வாணியர் பேரவை நிர்வாகிகள் ஜி.மோகனசுந்தரம், யூரோ சரவணன், கல்யாணசேகரன், கே. ஞானசேகரன், பி. ஆனந்தன் , எம். சரவணகுமார் , வி.சோபன்குமார் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com