இயக்குநர் ஜான்சன்.கே கதை, திரைக்கதை, வசனம் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து சென்ற வருடம் வெளியான படம் ‘A1’.
இந்தப் படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகளும், வசனங்களும், பாடல்களும் சந்தானத்தின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்தன. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள பயனாளர்கள், விமர்சகர்கள் என்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் அனைவருக்கும் நல்ல லாபத்தை கொடுத்தது. சந்தானம் படங்களின் வசூலில் புதிய மகுடமாக அமைந்தது.
அதே போல மீண்டும் ஒரு நகைச்சுவை விருந்தை எதிர்பார்க்கும் மக்களின் ஆசையை, இந்தக் கூட்டணி பூர்த்தி செய்யவுள்ளது. சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன் வெற்றி கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரியவுள்ளது. தற்போது இந்தக் கூட்டணியில் ஒளிப்பதிவாளராக ஆர்தர் கே.வில்சன் இணைந்துள்ளார்.
இந்தப் படத்தின் பூஜை இன்று (ஜனவரி 20) சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பூஜையில் சந்தானம், இயக்குநர் ஜான்சன்.கே, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உள்ளிட்ட படக்குழுவினருடன் தயாரிப்பாளர் மதன் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார்.
A1 படத்தைப் போலவே இந்தப் படமும் நல்ல நகைச்சுவை விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.