Aima’ Movie Trailer Release!

257

ஐமா ‘ திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

ரஜினியின் ‘ஜெயிலர் ‘ படத்திற்கே இந்த நிலைமை :கே ராஜன் பேச்சு!

தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள்: இயக்குநர் பேரரசு பேச்சு!

வெளி வராத படங்கள் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் முடங்கியுள்ளது : தயாரிப்பாளர் கே .ராஜன் வேதனை!

சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான் : இயக்குநர் பேரரசு பேச்சு!

‘ஐமா ‘ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன், இயக்குநர் பேரரசு, இயக்குநர் கேபிள் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த ‘ஐமா ‘திரைப்படத்தில்
யூனஸ் ,எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன் , ஷாஜி, ஷீரா, மேகா மாலு மனோகரன், படத்தைத் தயாரித்துள்ள சண்முகம் ராமசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.அறிமுக இயக்குநர் ராகுல் ஆர் .கிருஷ்ணா இயக்கி உள்ளார்.ஒளிப்பதிவு விஷ்ணு கண்ணன், எடிட்டிங் அருண் ராகவ், இசை கே .ஆர். ராகுல்.பாடல்கள் அருண் மணியன். தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films )நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி

விழாவில் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி பேசும்போது,

‘நான் ஐடி துறையில் இருந்தவன்.எனக்கு சினிமாவின் மீது ஆர்வமுண்டு. நடிப்பின் மீது மோகம் இருந்தது. ஒரு நடிகராக நான் யாரிடமும் போய் வாய்ப்பு கேட்க முடியாது.அது எப்படி என்று எனக்குத் தெரியாது. எனவே நானே ஒரு படத்தைத் தயாரித்து அதில் நடிப்பதாக முடிவு எடுத்தேன். அப்படித்தான் இந்த ‘ஐமா’ படம் உருவானது. இதில் இயக்குநர் சொன்ன கதை எனக்குப் பிடித்திருந்ததால் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்கள் பணிகளைச் சிறப்பாக செய்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.இந்தப் படத்தைத் தயாரித்ததன் மூலம் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். இன்று திரைப்படம் எடுப்பதை விட வெளியிடுவது சிரமமாக உள்ளது. படத்தைப் போட்டுக் காட்ட அழைத்தால்கூட யாரும் படம் பார்க்க வருவதில்லை.
இப்படிப்பட்ட இந்த நிலைமை சீரடைய வேண்டும் .ஊடகங்கள் இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார்.

இந்தப் படத்தை வெளியிடும் ‘ஆக்சன் ரியாக்ஷன்’ விநியோக நிறுவனத்தின் ஜெனிஷ் பேசும்போது,

” சிறு முதலீட்டுப் படங்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம் .ஊடகங்கள் என்றும் சிறு முதலீட்டுப் படங்களையும் நல்ல முயற்சிகளையும் கைவிட்டதில்லை. அந்த நம்பிக்கையில் இந்தப் படத்தை வெளியிடுகிறோம்” என்றார்.

தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன் பேசும் போது,

“சிறு முதலீட்டுப் படங்கள் தான் திரையுலகை என்றும் வாழவைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் மூலம் தான் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .கடந்த இரண்டு ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் தோராயமாக 320 படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.அவற்றில் 100 முதல் 150 படங்களுக்கு ஆடியோ வெளியீட்டு விழாக்கள் நடந்துள்ளன. ஆனால் சுமார் 70 படங்கள் தான் சிரமப்பட்டு வெளி வந்திருக்கின்றன. வெளியான பல படங்களின் தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விட்டார்கள். மீதமுள்ள 250 லிருந்து 300 படங்கள் வெளி வராமல் சிரமப்பட்டுக் கொண்டுள்ளன. இந்த வகையில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் இந்தப் படங்களில் முடங்கி உள்ளது.

நான் நிதி உதவி செய்த ஒரு படத்திற்கு 12 கோடி செலவானது .ஆனால் அதன் வெளி மொழி உரிமை போன்றவை ஆறு கோடிக்கு விற்பனையானது. இருந்தாலும் கூட அந்தப் படத்தை வெளியிட முடியவில்லை .இதுதான் இன்றைய நிலைமை .சிறு முதலீட்டுப் படங்கள் சிரமம் இன்றி வெளிவர வேண்டும். அப்படி வெளிவந்தால் அந்தக் தயாரிப்பாளர் மீண்டும் படம் தான் எடுப்பார் .ஆனால் பெரிய படங்களின் மூலம் வரும் லாபம் மீண்டும் சினிமாக்கு வருமா என்றால்,தெரியாது. இன்று ‘ஜெயிலர்’ படம் வெற்றிகரமாக ஓடியுள்ளது. ரஜினிகாந்த் பெரிய நட்சத்திர நடிகர்தான் சந்தேகம் இல்லை. இருந்தாலும் அவருக்குக் கூட மலையாளத்திலிருந்து மோகன்லாலும் கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமாரும் வந்து நடிக்க வேண்டி உள்ளது. இப்படி இன்று சினிமா மாறி உள்ளது. இப்போதெல்லாம் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படம் எடுக்கிறார்கள். அவர்களை நான் வரவேற்கிறேன். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

”இந்த ஐமா படத்தில் பத்து பாடல்கள் என்ற போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது .அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதைப் படத்தில் சரிவர வைத்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.

இந்தப் படத்தில் கதாநாயகன் பேசும்போது கண்ணாடி உடைக்கும் காட்சியில் நிஜமாகவே நடித்தேன் என்றார் .சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான்.உண்மை போல நம்ப வைக்க வேண்டும் அவ்வளவுதான். கத்தியால் குத்தும் காட்சி என்றால் நிஜமாகவே குத்தி விட முடியுமா? அப்படி எல்லாம் அபாயகரமான காட்சிகளில் நடிக்கக் கூடாது .அப்படி டூப் இல்லாமல் அபாயகரமான காட்சியில் நடித்துவிட்டு என்னுயிர்த் தோழன் பாபு தன் 30 ஆண்டுகள் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு இப்போது இறந்து விட்டார். இதை நாம் கவனிக்க வேண்டும்.எப்படி வேண்டுமானாலும் இப்போதுள்ள தொழில்நுட்ப வசதிகளில் எடுக்க முடியும்.எவ்வளவோ படங்களில் எதார்த்தம் மீறி காட்சிகள் வருகின்றன. சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான்.தெருவில் கழைக் கூத்தாடி செய்யும் ரிஸ்கைக் கூட சினிமாவில் பெரிய கதாநாயகர்கள் கூட செய்வதில்லை.அதற்கு அவசியமும் இல்லை. ஏனென்றால் அந்த அளவிற்கு வசதிகள் வந்து விட்டன. மெதுவாக நடந்து வருவதைக் கூட ஓடி வருவது போல் எடுக்க முடியும்.

தமிழ்த் திரைப்படங்கள் பெரிய பெரிய கதாநாயகன் நடிக்கும் படங்கள் கூட செட் போட்டு வெளி மாநிலங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன.அந்தந்த மாநிலத்தில் உள்ள தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். நம் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்கு அதில் பங்கேற்க வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. எங்கள் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களையும் கொஞ்சம் கவனியுங்கள் என்று நாங்கள் சொல்கிறோம்.இது பற்றி இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தனது ஆதங்கத்தை வெளியிட்ட போது அதைத் திரித்து திசை திருப்பி விட்டார்கள். இதைத் தவறாகச் சிலர் புரிந்து கொள்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் கேபிள் சங்கர் பேசும்போது,

” சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஆக்சன் ரியாக்சன் விநியோகஸ்தர் ஜெனிஷ் மிகவும் உதவியாக இருக்கிறார் .சிறு முதலீட்டுப் படங்களை வெளியிட்டு பெரிய நிறுவனமாக அவர் உயர்ந்திருக்கிறார். வளர்ந்த பிறகும் அவர் எப்போதும் தனது பணியைத் தொடர வேண்டும் “என்றார்.

இவ்விழாவில் படத்தின் கதாநாயகன் யூனஸ்,கதாநாயகி எவ்லின் ஜூலியட் இசையமைப்பாளர் கே. ஆர். ராகுல் ,ஒளிப்பதிவாளர் விஷ்ணு கண்ணன் உள்ளிட்ட படக்குழுவினரும் பேசினார்கள்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com