Statement from Vijayakanth

507

கேப்டன் விஜயகாந்த் அறிக்கை…..

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை என் கல்லூரியில் அடக்கம் செய்துகொள்ளலாம்

– விஜயகாந்த் அறிவிப்பு

 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை மக்களுக்கு தமிழக அரசு புரிய வைக்க வேண்டும்.

கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியில் ஒரு பகுதியை ஒதுக்கி தருவதாகக் கூறி தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த உலகில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் ஒருநாள் நிச்சயம் இறக்கத்தான் போகிறார்கள். இப்படி இருக்கும் போது மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுத்து மக்களுக்கு சேவை செய்த ஒரு மருத்துவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மனிதனின் நிலையை நாம் எண்ணி பார்க்க வேண்டும்.

கால்நடைகள் இறந்தாலே அதை மனிதாபிமானத்தொடு அடக்கம் செய்து உரிய மரியாதை செலுத்தி வரும் தமிழக மக்கள், தற்போதைய மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

உடலை அடக்கம் செய்வதால் எந்த தொற்றும் ஏற்படாது என உலக சுகாதார நிறுவனமும், தமிழக அரசும் தெரிவித்துள்ளது. ஆனால் மக்கள் தவறாக புரிந்து கொண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அடிப்பதும், ஓட்டுனர் உள்பட மற்றவர்களை தாக்குவதும் கண்டனத்துக்குரியது. மக்கள் அனைவரும் மனிதாபிமானத்தோடு சிந்தித்து, இதுபோன்ற செயலில் இனிமேல் யாரும் ஈடுபட வேண்டாம் என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் உடலை அடக்கம் செய்வதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை மக்களுக்கு தமிழக அரசு புரிய வைக்க வேண்டும். கடவுளுக்கு அடுத்தபடியாக நாம் கருதுவது மருத்துவர்களைத் தான். ஆனால் மக்கள் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு இந்த நிலை என்பது மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துக் கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”.இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

 

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com