Call-Taxi Driver Turns as Hero In “Kadathalkaran”

427

Kadathalkaran Movie Gallery

Flickr Album Gallery Pro Powered By: wpfrank

‘கடத்தல் காரன்’ படம் மூலம் ஹீரோவான கால்டாக்ஸி டிரைவர்!

பேருந்து கண்டக்டராக இருந்து சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்த ரஜினிகாந்த், நம்பிக்கையும், ஆர்வமும் இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் சினிமாத்துறையில் ஜெயிக்கலாம் என்பதை நிரூபித்து காட்டினார். அவர் வழியில் பலர் சினிமா துறையில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், கெவின் என்பவரும் ரஜினி பாணியில் சினிமாவில் ஹீரோவாகியிருக்கிறார்.

‘கடத்தல் காரன்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் கெவின், கால்டாக்ஸி டிரைவராக பணியாற்றிக் கொண்டிருந்தாலும், சினிமா மீது உள்ள ஆர்வத்தினாலும், நடிப்பின் மீது உள்ள காதலாலும், சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற தனது லட்சியத்தோடு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக
அறிமுகமாகிறார்.

மலையாளத்தில் மூன்று படங்களுக்கு திரைக்கதை எழுதியிருக்கும் எஸ்.குமார், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படம், ஆக்‌ஷன் கலந்த காமெடி கலாட்டாவாக உருவாகியிருக்கிறது.

திருடுவதை குலத்தொழிலாக வைத்திருக்கும் ஒரு கிராமத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரின் கட்டுப்பாட்டுக்கு ஊர் மக்கள் அடிபணிந்து வாழ்கிறார்கள். எந்த பொருளை யார் திருடினாலும், அதை சரிசமமாக பங்கிட்டு கொள்ள வேண்டும்
மற்றும் வெளியாட்கள் கிராமத்திற்குள் நுழைந்தால், அவர்களால் அந்த கிராமத்தை விட்டு வெளியேற முடியாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அந்த கிராமத்தில் இருக்கின்றன. அப்படிப்பட்ட கிராமத்தை சேர்ந்த சில திருடர்கள், திருமண வீட்டில்
திருடும் போது, ஹீரோயினான மணமகளை தூக்கிச் சென்றுவிடுவதோடு, மணமகளின் நகைகளை பங்கிட்டுக் கொண்டவர்கள், மணமகளை எப்படி பங்கிட்டு கொள்வது என்று யோசிக்க, மணமகனின் காதலரான ஹீரோ மணமகளை, அந்த திருட்டு
கிராமத்தில் இருந்து காப்பாற்ற முடிவு செய்து அந்த கிராமத்தில் பெண் வேடத்தில் நுழைகிறார்.

ஹீரோயினை காப்பாற்ற தான் ஹீரோ திருட்டு கிராமத்திற்குள் நுழைந்தாலும், அவர் அந்த கிராமத்திற்குள் நுழைந்ததற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறது, அது என்ன காரணம் என்பது தான் படத்தின் மிகப்பெரிய ட்விஸ்ட். இப்படி படம் முழுவதும் ரசிகர்கள் எதிர்ப்பார்க்க முடியாத ட்விஸ்ட்டுகள் வருவதோடு, யூகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.குமார்.

இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் கெவின், தனது முதல் படத்திலேயே பெண் வேடம் போட்டு அசத்தியிருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறார். குறிப்பாக சேசிங் காட்சிகளில், அவரே ஜீப் ஓட்டுவதோடு, சில சாகசங்களை
ரொம்ப சாதாரணமாக செய்திருக்கிறார். எப்படி சார் இப்படி, என்று கேட்டால், எல்லாம் சினிமா மீது இருக்கும் ஆர்வம் தான் சார். 9ம் வகுப்பு படித்துவிட்டு கால்டாக்ஸி டிரைவராக வாழ்க்கையை தொடங்கினேன். இருந்தாலும் எதாவது சாதிக்க வேண்டும், சமூகத்தில் நானும் ஒரு பிரபலாக இருக்க வேண்டும், என்று நினைத்தேன். அதற்காக சினிமாவில் நடிப்பு துறையை தேர்வு செய்து, நடிகராக வேண்டும் என்று பல வருடங்களாக முயற்சி செய்தேன். அந்த முயற்சிக்கு இயக்குநர் எஸ்.குமார் மூலம் வெற்றி கிடைத்திருக்கிறது. வாய்ப்பு கிடைத்தாலும், அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும், என்று
இப்படத்தில் பல ரிஸ்க்குகளை எடுத்திருக்கிறேன். அதனால், எனக்கு ரசிகர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது, என்று பதில் அளித்தார்.

கெவினுக்கு ஜோடியாக நடித்திருக்கும் ரேணு செளந்தருக்கு தமிழ் சினிமாவில் இது தான் முதல் படம் என்றாலும், மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர்களுடன் ருக்மணி பாபு என்ற நடிகர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் ‘நான் ராஜாவாகப் போகிறேன்’, ‘பத்து என்றதுக்குள்ள’, ‘டகால்டி’ உள்ளிட்ட சுமார் 80
படங்களில் நடித்திருக்கிறார். இப்படத்தில் இரண்டாவது ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு இவரடைய வேடம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பாபு ரபீக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

எப் 3 பிலிம்ஸ் (F3 Films) சார்பில் ஃபிரயா, ஃபெனி, பெலிக்ஸ் (Fraya, Fane, Felix) ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எல்.வி.கணேஷ் மற்றும் ஜுபின் இசையமைக்க, ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார். மணிபாரதி கலையை நிர்மாணிக்க, ரன் ரவி ஆக்‌ஷன் காட்சிகளை
வடிவமைத்திருக்கிறார். முத்துவிஜயன், கெளசல்யன் ஆகியோர் பாடல்கள் எழுத, கூல் ஜெயந்த் மற்றும் இம்தியாஷ் நடனம் அமைத்திருக்கிறார்கள்.

கூடல்நகர், கம்பம், தேனி, குமுளி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் ‘கடத்தல் காரன்’ படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இசை வெளியீட்டை நடத்தி அதை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com