எப் 3 பிலிம்ஸ் (F3 Films) சார்பில் ஃபிரயா, ஃபெனி, பெலிக்ஸ் (Fraya, Fane, Felix) ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கடத்தல் காரன்’.எஸ்.குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் கெவின் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக ரேணு செளந்தர் அறிமுகமாகிறார். இவருக்கு தமிழில் இதுதான் முதல் படம் என்றாலும்,
மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். இயக்குநர் எஸ்.குமாரும் மூன்று மலையாள திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
ஆக்ஷன் கலந்த காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள இப்படத்தில் ருக்மணி பாபு, பாபு ரபீக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். எஸ்.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு எல்.வி.கணேஷ் மற்றும் ஜுபின் இசையமைத்திருக்கிறார்கள்.
ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். மணிபாரதி கலையை நிர்மாணிக்க, ரன் ரவி ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
முத்து விஜயன், கெளசல்யன் ஆகியோர் பாடல்கள் எழுத, கூல் ஜெயந்த் நடனம் அமைத்திருக்கிறார்.
இப்படத்தின் பாடல்களை இயக்குநர் இமயம் பாரதிராஜா சமீபத்தில் வெளியிட்டார். கதாநாயகன் கெவின், படத்தின் இயக்குநர் எஸ்.குமார், இயக்குநர் இஸ்மாயில், பி.ஆர்.ஓ கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். பாடல்களை கேட்டு வெகுவாக பாராட்டிய பாரதிராஜா, கதை
சுருக்கத்தை கேட்டு, படம் நேட்டிவிட்டியுடன் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப வித்தியாசமாக இருப்பதாக, பாராட்டினார்.
திருடுவதை குலத்தொழிலாக வைத்திருக்கும் ஒரு கிராமத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரின் கட்டுப்பாட்டுக்கு ஊர் மக்கள் அடிபணிந்து வாழ்கிறார்கள். எந்த பொருளை யார் திருடினாலும், அதை சரிசமமாக பங்கிட்டு கொள்ள வேண்டும் மற்றும் வெளியாட்கள் கிராமத்திற்குள் நுழைந்தால், அவர்களால் அந்த கிராமத்தை விட்டு வெளியேற முடியாது. இப்படி
பல கட்டுப்பாடுகள் அந்த கிராமத்தில் இருக்கின்றன. அப்படிப்பட்ட கிராமத்தை சேர்ந்த சில திருடர்கள், திருமண வீட்டில் திருடும் போது, ஹீரோயினான மணமகளை தூக்கிச்
சென்றுவிடுவதோடு, மணமகளின் நகைகளை பங்கிட்டுக் கொண்டவர்கள், மணமகளை எப்படி பங்கிட்டு கொள்வது என்று யோசிக்க, மணமகனின் காதலரான ஹீரோ மணமகளை, அந்த திருட்டு கிராமத்தில் இருந்து காப்பாற்ற முடிவு செய்து, அந்த கிராமத்தில் மாறு
வேடத்தில் நுழைகிறார்.
ஹீரோயினை காப்பாற்ற தான் ஹீரோ திருட்டு கிராமத்திற்குள் நுழைந்தாலும், அவர் அந்த கிராமத்திற்குள் நுழைந்ததற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறது, அது என்ன காரணம் என்பது தான் படத்தின் மிகப்பெரிய ட்விஸ்ட். இப்படி படம் முழுவதும் ரசிகர்கள் எதிர்ப்பார்க்க முடியாத ட்விஸ்ட்டுகள் வருவதோடு, யூகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.குமார்.
இப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் கெவின் முதல் படம் என்றாலும் ஆக்ஷன் மற்றும் கார் சேசிங் காட்சிகளில் எந்தவித டூப் போடாமல் ரியலாக நடித்திருக்கிறார். ஹீரோயின் ரேணு சவுந்தரும் தனது பங்கிற்கு ரசிகர்களை வெகுவாக கவர்வதோடு, இவர்களை தாண்டி மேலும் சில நடிகர்களும் மக்கள் மனதில் நிற்கும் வகையில் நடித்திருக்கிறார்கள், என்று இயக்குநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தை பார்த்த இயக்குநரும், விநியோகஸ்தருமான இஸ்மாயில், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியதோடு, படத்தை இம்மாதம் இறுதியில் வெளியிட முடிவு செய்துள்ளார்.