அரசியலுக்கு எங்களை கொண்டுவந்ததே சினிமாதான் பேய்மாமா இசை வெளியீட்டு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு
Pei Mama Press Meet Event Stills
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா அவர்களை வணங்குகிறேன். இங்கு பேசியவர்கள் இந்த அரசு சினிமாத்துறைக்கு நிறைய செய்கிறது என்று சொன்னார்கள். என்னை அம்மா நியமித்ததே அதற்காகத் தான். செய்தி விளம்பரத்துறை என்பது பெரிய ஜாம்பவான்கள் வசித்த துறை . நாங்கள் எல்லாம் படம் பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள். நாங்கள் அரசியல் படித்ததே தியேட்டர்களில் தான். எம்.ஜி.ஆர் இறந்து போவது போல வரும் ஐந்து படங்களைத் தவிர அவரது மற்ற எல்லாப்படங்களையும் 30 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன். ஆக சினிமாவும் தியேட்டர்களும் எங்களுக்கு முக்கியமானது. இந்தக் கொரோனா நிறைய விசயங்களை முடக்கிப் போட்டுள்ளது. கொரோனா கண்ணுக்குத் தெரியாத வைரஸ். அதேபோல் பேயும் கண்ணுக்குத் தெரியாத. ஆனால் அந்தப்பேயை பேய்மாமா என்று ரசிக்குற படி படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம். இந்தப்பேய் மாமா கொரோனாவை விரட்டும் என்று சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் ரொம்ப சந்தோசம். உலக அளவில் இந்தப்படத்திற்கு விருது கிடைக்கும்.
பேய் இருக்கா இல்லியா என்று தெரியாது. ஆனாலும் பேய் என்றால் பயம் தான். பேயை சப்ஜெக்டாக வைத்து கொரோனாவை ஒழிப்பேன் என்ற தீம் நல்ல தீம். ஷக்திசிதம்பரம் நல்ல சாதுர்யமானவர். அவர் எடுத்த நிறைய நல்லபடங்கள் உண்டு. இந்தப்படம் ரொம்ப நல்லா வந்திருப்பதாகச் சொன்னார்கள். என்ன தான் ஓடிடியில் படம் பார்த்தாலும் தியேட்டரில் படம் பார்ப்பது தான் சுகம்.
வீக் என்ட் என்றாலே தியேட்டர் தான் எண்டெர்டெயின்மெண்ட். அதனால் பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி பயப்பட வேண்டாம். சீரியல் முதற்கொண்டு சினிமா சூட்டிங் வரை எல்லாத்திற்கும் அனுமதி படிப்படியாக கொடுத்தோம். அதேபோல் சினிமா தியேட்டர் திறப்பது பற்றி ஓரிரு நாட்களில் நல்ல முடிவுகளைச் சொல்வோம்.
இந்தப்பேய்மாமா படம் வெளிவரும் போது நிச்சயம் தியேட்டர்களில் கூட்டம் வரும். அதனால் யோகிபாபு ஷக்திசிதம்பரம் படத்தின் தயாரிப்பாளர் யாரும் கவலைப்பட வேண்டாம். கோவா பிலிம் பெஸ்டிவெலில் நமது தமிழ்ப்படங்களும் திரையிடப்படுவதைப் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கும். நான் வருடம் வருடம் அங்கு போவேன். நம் படங்களுக்கு அங்கு நல்ல மரியாதை இருக்கிறது.
பேய்மாமா வித்தியாசமான கதைக்களம் உள்ள படம் என்பதால் இந்தப்படமும் கண்டிப்பாக பெஸ்டிவெலில் பேசப்படும். அதனால் யோகிபாபு இண்டெர்நேஷனல் ஸ்டார் ஆகிடுவார். இந்தப்படம் நல்ல சுவாரசியமா இருக்கும். எல்லாத்துறைகளைப் போல இந்தச் சினிமாத்துறையும் தன்னிறைவு பெற்ற துறையாக விளங்கும்.” என்றார்
இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது,
“சக்தி சிதம்பரம் சார் 16 வருடத்திற்கு முன்பு நான் ஒரு படிக்கட்டு ஏறி ஒரு இசை அமைப்பாளரைச் சந்திக்கும் முன் நான் சந்தித்த ஒரு பெரிய இயக்குநர் சக்தி சிதம்பரம் சார். எங்கு பார்த்தாலும் அன்போடு பேசக்கூடியவர். இன்றைய நாளில் ஒரு புதுப்பட இயக்குநர் போல ஓடிக்கொண்டிருக்கிறார். எனக்கு காமெடிப்படம் ரொம்பப்படம் பிடிக்கும். பேய்மாமா படத்தைப் பார்க்கும் போது சந்தோசமா இருக்கு. இப்படியொரு படம் எடுக்கணும் என்றும் ஆசையா இருக்கு. யோகிபாபுவை நான் இதுவரை நேரில் சந்தித்தது இல்லை. அந்தத் தம்பியிடம் எப்படி பேசுவது என்று சிந்திக்கும் போது, அந்தத் தம்பி என்கிட்ட நேரே வந்து சார் நான் உங்க ரசிகன் சார் அப்படியென்றார். இந்த எளிமை வாழ்நாள் முழுதும் அவரை நல்லா வைக்கும். இந்த 7 மாதங்களாக நாம் எல்லாருமே பேயாகத்தான் இருந்தோம். இப்பத்தான் மனுசங்களா உலாவுறோம். அதற்கான காரணமா இந்த விழாவும் படமும் இருக்கு. அதனாலே இப்படமும் பெரியதாக வெற்றிபெற வேண்டும். சாப்பாடு இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம். ஆனால் சினிமா இல்லாமல் வாழ முடியாது” செத்துப் போய் விடுவோம் என்றார்.
நடிகர் யோகிபாபு பேசியதாவது,
” ஷக்தி சிதம்பரம் சார் இந்த மேடையில் என்னை கதாநாயகனா நிற்க வச்சிட்டார். ரொம்ப பயமா இருக்கு. இந்தப்படம் முதலில் வடிவேல் சாருக்கு தான் பண்ணியது என்று ஷக்தி சார் சொன்னார். உடனே நான் ” சார் வடிவேல் சார் ஜீனியஸ் சார்.அதனால் எனக்கு எப்படி சார் செட்டாகும்”னு கேட்டேன். இந்தப்படம் வெற்றி அடைய உங்கள் எல்லாரோட ஆதரவும் அன்பும் வேணும். நான் சம்பள விசயத்தில் பெரிய கறார் கிடையாது சார். என் மேனஜரிடம் வேண்டுமானால் கேளுங்க. சமீபத்தில் கூட ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் பொண்ணு..ஒரு கதைப் பண்ணிருக்கேன் நீங்க பண்ணிக்கொடுக்கணும். ஆனால் என்கிட்ட பட்ஜெட் இல்ல. இந்தப் படம் நடந்தா தான் சார் எனக்கு கல்யாணம் நடக்கும்னு சொல்லிச்சு. நான் உடனே “ப்ரீயா நடிச்சித் தர்றேம்மா உனக்கு முதல்ல கல்யாணம் நடக்கட்டும்” என்று சொன்னேன். இப்படி நிறைய அட்ஜெஸ்மெண்ட் பண்ணிட்டு தான் இருக்கேன். சக்தி சிதம்பரம் சார் டயலாக்கில் நிறைய சுதந்திரம் கொடுத்தார். அவருக்கு நன்றியைத் தெரிவிச்சிக்கிறேன். படத்தின் ட்ரைலரில் சொன்ன மாதிரி நான் காமெடியன் தான் காமெடியன் தான். அனைவருக்கும் நன்றி” என்றார்
பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி பேசியதாவது,
“இந்தமாதிரியான பங்ஷன் இனி நடத்தலாம் என்ற நம்பிக்கை தரும் விதமாக இந்த விழாவிற்கு அமைச்சர் வந்திருப்பது மகிழ்ச்சி. சினிமாத்துறை சார்ந்தவர்களுக்கு மூன்று முறை கொரோனா நிவாரணம் வழங்கியதற்கு அமைச்சருக்கும் முதல்வருக்கும் நன்றி. இந்த பேய்மாமா படத்தின் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் மிகப்பெரிய இயக்குநர். கையில் என்ன இருக்கிறதோ அதைவைத்து மிகச்சிறப்பாக படத்தை எடுக்கக் கூடியவர். எல்லாரையும் சிரிக்க வைக்கக் கூடிய படங்களை எடுக்கக் கூடியவர் ஷக்தி சிதம்பரம். யோகிபாபு மிகச்சிறந்த கலைஞர். அவரின் மனிதாபிமானம் பற்றியும் நிறையபேர் பேசியிருக்கிறார்கள். வடிவேலு நடிக்கவிருந்த படம் இது. இதற்கு யோகிபாபு செட் ஆவாரா என்று ஷக்தி சிதம்பரம் என்னிடம் கேட்டார். நான் கண்டிப்பாக செட் ஆவார் என்றேன். இப்போது டிரைலரைப் பார்க்கும் போது, நான் சொன்ன து 100% சரியாக இருக்குறது. அது சந்தோசமாக இருக்கிறது. மம்முட்டி என் படத்தில் நடிக்கும் போது 40 லட்சம் சம்பளம் வாங்கினார். அதே நேரத்தில் இன்னொரு படத்தில் நடிக்க 2 லட்சம் தான் சம்பளம் வாங்கினார். நான் கேட்டபோது, அதற்கு ஆர்ட் பிலிம். என் சம்பளத்தை அவங்களால் தர முடியாது. அதேநேரம் என்னால் அந்தப்படத்தை மிஸ் பண்ண முடியாது என்றார். யோகிபாபு உள்பட இங்குள்ள எல்லா நடிகர்களும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களுக்கும் ஏற்ற நடிகர்களாக நீங்கள் விளங்க வேண்டும். படத்தின் கனத்தைப் பொறுத்து சம்பளம் வாங்குங்கள். உங்கள் மார்க்கெட்டை வைத்து சம்பளம் வாங்காதீர்கள்.
அமைச்சர் எங்களுக்கும் தியேட்டர்ஸ் திறந்து விட்டால் எங்கள் வாழ்வும் தொய்வில்லாமல் ஒட ஆரம்பித்து விடும். இந்த பேய்மாமாவின் கதையைப் பார்க்கும் போது பெரிய வெற்றியடையும் என்று நம்புகிறேன்” என்றார்
இயக்குநர் ஷக்தி சிதம்பரம் பேசியதாவது,
“இந்த விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி. இந்த மேடையில் என்னை எல்லாரும் உட்காரச் சொன்னார்கள். நான் இந்தப்படம் மூலம் நிற்க வேண்டும் என்று நினைக்கிறேன். திரு ஏலப்பன் சார் அவர்களுக்கும் அவர் மகன் விக்னேஷ் சார் அவர்களுக்கும் நன்றி. நான் கதை சொன்னதும் அவர்கள் வேறு எதையுமே கேட்கவில்லை. பணம் கொடுப்பார்கள். நான் கூப்பிட்டால் தான் ஷுட்டிங் ஸ்பாட் வருவார்கள். வேறு எந்தக் கேள்வியும் கேட்கமாட்டார்கள். இப்படி ஒரு தயாரிப்பாளர் ஒரு இயக்குநருக்கு கிடைத்தால் நிச்சயமாக ஹிட் படம் கொடுத்துவிடலாம். இந்தப்படம் ஒரு குட்டி காஞ்சனாவாக இருக்கும். என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தப்படத்திற்கு எல்லா ஹீரோக்களுக்கும் ஒரே மரியாதையை தான் கொடுப்பேன். அது ரஜினிகாந்தாக இருந்தாலும் சரி யோகிபாபுவாக இருந்தாலும் சரி. என் உயிர் நண்பர் பொன்குமரன் அவர்கள் இந்தப்படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதில் இருந்து நிறைய உழைத்திருக்கிறார். அவருக்கு எதாவது செய்யணும் என்று நினைத்தேன். படத்தில் வில்லன் கேரக்டரை அவருக்கு கொடுத்துவிட்டேன். அதுபோல் அபிஷேக் ஒரு மெயின் வில்லன் கேரக்டர் பண்ணியிருக்கிறார். கேமராமேன் பன்னீர் செல்வம் இரவு பகலாக உழைத்து நன்றாக படத்தை எடுத்துக்கொடுத்தார். இந்தப்படத்தில் யோகிபாபுவை நடிக்கச் சொல்லி லிங் கொடுத்த நண்பர் ரவிமரியாவுக்கு நன்றி. தீய டாக்டர்கள் ஒரு வைரஸை பரப்பி நோயை உண்டாக்குகிறார்கள். அதில் பாதிக்கப்படும் ஒருவரை மூலிகையை தயாரிக்கும் ஒரு குடும்பம் காப்பாற்றுகிறது. இதனால் கோபமடைந்த அவர்கள் மூலிகை குடும்பத்தை கொன்று விடுகிறார்கள். இறந்தவர்கள் பேயாக யோகிபாபு மீது வருகிறார்கள். இதுதான் படத்தின் கதை. இந்தப்படம் நாங்கள் எடுத்தது போன வருடம் டிசம்பர். ஆனால் இப்போது கொரோனாவோடு கனெக்ட் ஆகுது. கொரோனாவை விரட்டும் பேய்மாமாவாக யோகிபாபு இருப்பார். கொரோனா முடியும் நேரத்தில் இந்தப்படம் வெளியாக இருப்பது சந்தோசம்..இந்தப்படம் தியேட்டரில் தான் வெளியாகும். இது தியேட்டருக்கான படம்” என்றார்