இசைஞானியுடன் முதன்முதலாக இணையும் ரஞ்சனி & காயத்திரி – Video & News

393

 

டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ மாயோன்’ மிஸ்ட்ரி திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படத்தை  அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கியிருக்கிறார். இதில் நடிகர்  சிபிராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மூத்த நடிகர் டத்தோ ராதாரவி, இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார்.

கர்நாடக இசை உலகில் முன்னணி வாய்ப்பாட்டு கலைஞர்களாக இருக்கும் ரஞ்சனி & காயத்திரி ஆகிய இரட்டை கலைஞர்கள் முதன்முதலாக இசைஞானி இளையராஜாவின் இசையில் பின்னணி பாடியிருக்கிறார்கள். ‘மாயோனே மணிவண்ணா..’ எனத் தொடங்கும் அந்தப் பாடலை இசைஞானி இளையராஜா எழுதி இருக்கிறார். இன்று வெளியாகியிருக்கும் இந்தப் பாடலுக்கு இணையதளங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதள பார்வையாளர்களையும் கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அதிலும் குறிப்பாக ”தீயோரை திருத்தாது  திருப்பணி ஏற்கின்றாய், கோயில் செல்வம் கொள்ளை போக தடுத்திடாமல் படுத்து கிடப்பது அழகோ..!” என்ற வரிகளில் இசைஞானி, இன்றைய இந்து மதத்தை பின்பற்றுபவர்களிடமுள்ள மனக்குமுறலை நேர்த்தியாக பதிவு செய்திருப்பது திரையிசை ரசிகர்களுக்கு வியப்பை அளித்திருக்கிறது.

‘மாயோனே மணிவண்ணா..’ எனத் தொடங்கும் இந்தப் பாடல், ‘மாயோன்’ படத்தின் உள்ளடக்கத்தை பிரதிபலிக்கும் திரைப்படப் பாடலாக இருந்தாலும், ரஞ்சனி & காயத்ரி ஆகியோரின் இனிமையான குரலில், பக்தி பாடலாகவும், தமிழகத்திலுள்ள அனைத்து இல்லங்களிலும் தவறாது ஒலிக்கக்கூடும்  என திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.

இந்த பாடலில் நீண்ட நாட்கள் கழித்து கர்நாடக இசைக் கலைஞர்களின் காந்த குரலில் சங்கதிகளைக் கேட்கும் போது, இசைஞானியின் மெத்த இசையனுபவம் ரசிகர்களின் காதிற்கு தேனிசையாக பாய்கிறது என்றால் அது மிகையில்லை.

https://youtu.be/NU_QdbXvZJk

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com