Kollywood News

Journalist #sudhangan passes away. #RIP !! – mykollywood.com

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல்

தமிழக பத்திரிகை உலகில் குறிப்பிடத்தக்க மூத்த பத்திரிகையாளரும் நமது சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் மூத்த உறுப்பினருமான திரு.சுதாங்கன் (வயது 63 ) இன்று (12-09-2020) காலமானார். உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.அன்னார் மறைவிற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

திசைகள் இதழில் தன் எழுத்துப் பணியைத் தொடங்கியவர் பிறகு குமுதம் பத்திரிகையில் பகுதி நேர நிருபராகப் போனார். அங்கே அப்போது இணையாசிரியராக இருந்தவர் திரு ரா.கி.ரங்கராஜன். அதனால் இவர் பெயர் மாற்ற வேண்டிய சூழல். ரங்கராஜனான இவர் சுதாங்கன் ஆனார்.
1982 இறுதியில் விகடன் நிறுவனத்தில் புதிதாக துவங்க இருந்த ஜூனியர் விகடனின் முதல் நிருபராக சேர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கே பணி புரிந்தார் . 1986ம் ஆண்டு கிராமப்புற ரிப்போர்ட்ங்கிற்காக கொல்கத்தாவின் ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையின் விருதை பெற்றார்.

80 களில் நாடு முழுவதும் கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்டது என மத்திய அமைச்சர் ஒருவர் அறிவித்தார் .கொத்தடிமை முறை நடைமுறையில் உள்ளது என ஆதாரபூர்வமாக நிரூபித்ததுடன் நிற்காமல் தமிழக காவல்துறை உதவியுடன் ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமைகளாக சிக்கி இருந்த தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்ட பெருமையும் திரு.சுதாங்கனுக்கு சேரும்.
எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது அவரது சொந்தத் தொகுதியான ஆண்டிப்பட்டியில் மக்கள் நல திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை என கள நிலவரங்களை செய்தியாக்கியவர் சுதாங்கன்.அன்றைய அமைச்சர்கள் மறுப்பு அறிக்கை வெளியிட்டபோது தொகுதியில் நலப்பணிகள் நடக்கவில்லை என்பதை வீடியோ ஆதாரங்களாக முதன்முதலில் வெளியிட்டார்.இதை ஏற்றுக்கொண்ட அன்றைய முதல்வர் எம் ஜி ஆர் தொகுதிக்கான நலப் பணிகளை செய்ய உத்தரவிட்டார் என்பது வரலாறு.

1992ம் வருடம். ஜூனியர் விகடனின்பொறுப்பாசிரியர் பொறுப்பில் இருந்து வெளியேறி தினமணி நாளிதழில் பொறுப்பாசிரியராக சேர்ந்தார்.
நிர்வாகம் இரு குழுமங்களாக மாறிய நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் மும்பைக்காக தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை துவக்கி அதன் துவக்க ஆசிரியராக ஆனார்.

1996ம் வருடத்திலிருந்து தொடர்ந்து விஜய், ராஜ், ஜெயா தொலைக்காட்சிகளில் அரசியல் விமர்சகனாக பேட்டி எடுத்த அனுபவம் இவருக்கு உண்டு. தொடர்ந்து 36மணி நேரம் 19தேர்தல் முடிவுகளை விஜய டிவியில் கொடுத்த அனுபவம் உண்டு. நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு தொடர்கதை விகடனில் எழுதியவர். எம்.ஜி.ஆர். எம்.ஆர். ராதா கொலை முயற்சி வழக்கின் ஒரு பதிவாக தினமணி கதிரில் சுட்டாச்சு சுட்டாச்சு என்கிற பெயரில் 52வாரங்கள் வந்த தொடர் பின்னர் புத்தகமாக வந்தது. கற்பனை சாராத கட்டுரை தொகுப்புதான் தேதியில்லாத டைரி. இதுவும் இப்போதும் பலரால் பாதுக்காக்கப்படும் ஆவணம் என்றால் அது மிகையல்ல.
திரு.சுதாங்கன் அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் , நண்பர்கள்,அவருடன் இணைந்து பணியாற்றிய ஏராளமான பத்திரிகையாளர்கள் என அனைவருடனும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் துயரத்தை பகிர்ந்து கொள்கிறது .

✍️பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்
12-09-2020

சுதாங்கன் மறைவு

வைகோ இரங்கல்

சிறந்த பத்திரிகையாளரும், தொலைக்காட்சி ஊடக இயலாளருமான எனது இனிய நண்பர் சுதாங்கன் இயற்கை எய்தினார் என்ற செய்தி, தாங்க இயலாத அதிர்ச்சியையும், துயரத்தையும் தந்தது.

திருவைகுண்டம் அருகே தென்திருப்பேரை வைணவத் திருத்தலத்தில் பிறந்தவர்.

எண்பதுகளின் தொடக்கத்தில், அவர் ஆனந்த விகடனில் செய்தியாளராக இருந்தபோது, தில்லியில் என் இல்லத்தில் சில நாள்கள் தங்கி இருந்தார். அவர்தான், டைகர் ஆஃப் பார்லிமெண்ட் என்று என்னைப் பற்றி ஒரு கட்டுரையும் எழுதினார்.

நட்புக்கு மிக மிக முக்கியத்துவம் கொடுப்பவர். மிகச்சிறந்த எழுத்தாளர். மனதில் பட்ட கருத்துகளை, துணிச்சலாகவும், தயக்கம் இன்றியும் சொல்வார். எல்லாப் பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து, கேள்விகள் தொடுக்கவும், விடைகள் விடுக்கவும் ஆற்றல் வாய்ந்தவர் ஆவார்.

இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய அவர் மறைந்தார் என்பதை நினைத்தாலே நெஞ்சம் வேதனை அடைகின்றது. அவரது மறைவு, பத்திரிகைத் துறைக்கு, ஊடகத் துறைக்கு மிகப்பெரிய இழப்பு ஆகும்.

அவரை இழந்து துன்பத்தில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ,
பொதுச்செயலாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

தாயகம்,
சென்னை 8
12 செப்டெம்பர் 2020

Related Articles

Protest against Rajamouli’s ‘RRR’

Naveen

Emotional message from Meera Chopra aka Nila

Naveen

Rashmika Mandanna talks about her recent habits

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami