Movie Preview

‘டேனி’ படத்தைப் பற்றி வரலட்சுமி சரத்குமார்

டேனி படத்தின் கதைக்களம்:

தஞ்சாவூருக்கு அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்தை மையப்படுத்தி தான் இந்தக் கதை நடக்கிறது. அந்த காவல் நிலையத்தின் மையத்துக்குள் நடக்கும் ஒரு கொலையைத் துப்பறியும் காவல்துறை அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். அவருடன் பிங்கி என்ற ஒரு நாய் நடித்திருக்கிறது. படத்தில் அதன் பெயர் தான் டேனி. உடனிருக்கும் மனிதர்களை நம்பாமல், வரலட்சுமி – டேனி இணைந்து எப்படி அந்தக் கொலையை துப்பு துலக்கினார்கள் என்பதே ‘டேனி’ படத்தின் கதை.

இந்த வழக்கை விசாரிக்கும் போது வரும் இடைஞ்சல்களை எல்லாம் சமாளித்து, இந்தக் கொலையைச் செய்த குற்றவாளி யார் என்பது சுவாரசியமான திரைக்கதையாக இருக்கும். இதில் வேல. ராமமூர்த்தி, கவின், சுதாகர், அனிதா சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தைப் பற்றி வரலட்சுமி சரத்குமார் கூறியதாவது:

 மக்கள் செல்வி நடித்துள்ள படத்தில், நாயின் பெயர் தலைப்பாக இருக்கிறதே?

 நாய் என்ன நம்மை விட குறைவா. அந்த டேனி என்கிற நாய் தான் படத்தின் ஹீரோ. இதில் இன்ஸ்பெக்டராக நான் நடித்துள்ளேன். நான் எந்தக் கதாபாத்திரத்துக்கும் யாரிடமும் கற்றுக் கொள்வதில்லை. இந்தப் படத்தில் காவல்துறை உடையணிந்தவுடன், இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதற்கு ஏற்றார் போல் நடித்துள்ளேன்

டேனி படத்தில் பிடித்த விஷயம்?

நாய்க்குட்டியுடன் நடித்தது தான் பிடித்த விஷயம். கதை ரொம்ப அழகாக இருந்தது. ஒரு கொலை நடக்கிறது, அதை எப்படி ஒவ்வொரு கட்டமாக தாண்டி கண்டுபிடிக்கிறார்கள் என்ற கதை. தேவையில்லாமல் எந்தவொரு காட்சியுமே இருக்காது.

நாயுடன் பழகிய அனுபவம்?

படப்பிடிப்பு தளத்தில் நாயைப் பார்த்தவுடன் முதலில் போய் கட்டிப்பிடித்துவிட்டேன். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்குப் போனதிலிருந்து டேனி எப்போது வருகிறது என்று தான் கேட்டுக் கொண்டே இருந்தேன். தன்னுடைய காட்சிகளுக்குப் பிறகு அழகாக போய் அதன் இருக்கையில் அமர்ந்து கொள்ளும். நமக்கு இது கேமரா, படப்பிடிப்பு என்றெல்லாம் புரியும். ஆனால், டேனியே பல டேக்குகள் வாங்காமல் ட்ரெய்னர் என்ன சொல்றாரோ அதை சரியாக செய்துக் கொடுத்தது.

ஓடிடியில் மற்ற மொழிகளில் பல்வேறு ஜானர்களில் படங்கள் வருகிறது. ஆனால்,  தமிழில் நாயகிகள் சார்ந்த படங்கள் மட்டுமே வருகிறதே?

தமிழ் சினிமா எப்போதுமே கொஞ்சம் பின்னோக்கித் தான் இருக்கிறோம். முதலில் நாயகியை மையப்படுத்திய படங்களே இல்லை. அப்படின்னா என்ன என்று கேட்டார்கள். இப்போது நாயகியை மையப்படுத்திய படங்கள் வந்திருக்கிறது. ஒரு மாற்றத்துக்கு மறுத்தால் நாம் இன்னும் பின்னோக்கி சென்றுவிடுவோம். மாற்றம் வரும் போது, நாமும் அதோடு மாற பழகிக் கொள்ள வேண்டும்.

நாயகர்கள் படங்களுக்கு ஓப்பனிங் மார்க்கெட் என்றெல்லாம் இருக்கும். நாயகிகள் படங்கள் இன்னும் அந்த மார்க்கெட் அளவுக்கு வரவில்லை. அது தவறு என்று சொல்ல முடியாது. ஹாலிவுட், பாலிவுட்டில் எல்லாம் நாயகியை மையப்படுத்திய படம் என்றெல்லாம் கிடையாது. அங்கு அனைத்துமே படம் தான். தென்னிந்திய திரையுலகும் விரைவில் அந்த நிலையை அடையும். நாயகர்களோ, நாயகிகளோ அதே உழைப்பு தான் கொடுக்கிறோம். அப்படி பிரிக்க வேண்டிய அவசியமில்லை.

மக்கள் செல்வி என்று போடச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்  என்று சொல்லப்படு கிறதே…

மக்கள் செல்வி என்று கீர்த்தி சுரேஷை அழைத்து வருவதாகச் சொன்னார்கள். இது தொடர்பாக விசாரித்த போது, மக்கள் செல்வி என்ற பட்டத்தை யாருமே யாருக்கும் கொடுக்கவில்லை என்று தெரிந்து கொண்டேன். என்னைப் பொறுத்தவரை எனது சினிமா வாழ்க்கையைத் தவிர, பல பேருக்கு உதவி மற்றும் சேவை செய்து வருவதால் ‘மக்கள் செல்வி’ என்ற பட்டத்தை எனக்கு பல்வேறு அமைப்பினர் இணைந்து கொடுத்தார்கள்.

கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கோடிக்கணக்கில் உதவி செய்கிறார்கள். ஆனால், நமது நாயகர்கள் அமைதியாக இருப்பது தெரிகிறதே…

நான் சேவை செய்து கொண்டிருக்கிறேன். நாயகர்கள் உதவி செய்வது, செய்யாதது பற்றியெல்லாம் நான் கருத்துச் சொல்ல முடியாது. அது அவர்களுடைய விருப்பம். மற்றவர்களுடைய பணிகளுக்கு எல்லாம் கருத்துச் சொல்வது என் வேலையல்ல.

நாயகி, வில்லி என நடிக்கிறீர்கள், சேவை செய்கிறீர்கள், பெண்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறீர்கள். அடுத்தாண்டு தேர்தல் வருகிறது. மக்கள் செல்வி அரசியலில் ஈடு படுவாரா?

அடுத்தாண்டு எல்லாம் இல்லை. ஆனால், இன்னும் சில ஆண்டுகள் கழித்து அரசியலுக்கு வருவேன். இப்போது இல்லை. அப்பாவின் கட்சி தொடங்கி யாருடைய கட்சியிலும் இணைய வாய்ப்பில்லை. இப்போதைக்கு சேவ் சக்தியில் மட்டும் இருக்கிறேன். அரசியலுக்கு உள்ளே எந்தவித பயமும் இன்றி குரல் கொடுக்கும் நபர்கள் தான் நமக்கு தேவை.

பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உங்கள் கட்சி இருக்குமா?

நான் ஆண்களுக்கு எதிரானவள் அல்ல. சாத்தான்குளம் விவகாரத்தில் ஒட்டுமொத்த காவல்துறையையே தப்பு சொன்னார்கள். அது தவறு. சில பேர் செய்த தவறு அது. அனைத்து ஆண்களையும் கற்பழிப்பவர்கள் என்று சொன்னால் எப்படி தவறோ, அது போல தான் ஒட்டுமொத்த காவல்துறையையும் சொல்வது. பெண்கள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் துணிச்சலாகப் பேசுபவர்கள் அரசியலில் தேவை என்பதே என் கருத்து.

தெனாவட்டான பெண், கோபமான பெண் என்ற இமேஜ் நீங்கள் நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் உருவாகிறதே..

வெளிநாட்டில் டூயட், நாயகனுடன் காதல் என்றெல்லாம் நடிப்பதற்கு பல பேர் இருக்கிறார்களே. நானும் அதை பண்ண வேண்டுமா. என்னைப் பொறுத்தவரை கதை தான் ஹீரோ. கதாநாயகி என்று அழைப்பதை விட, கதையின் நாயகி என்று அழைப்பதை விரும்புபவள் நான். கதை நன்றாக இருந்தால் போதும், என் கதாபாத்திரம் சிறிதாக இருந்தால் கூட தயக்கமின்றி நடிப்பேன். நான் நாயகியா, வில்லியா என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.

சாத்தான்குளம் சம்பவத்துக்குப் பிறகு நிறையப் பேர் காவல்துறையினரைத் திட்டினார்கள். சில இயக்குநர்கள் கூட காவல்துறையை மையப்படுத்தி படம் எடுத்ததிற்கு வெட்கப்படுகிறேன் என்றார்கள். உங்கள் கருத்து என்ன?

3- 4 பேர் செய்த குற்றத்துக்காக ஒட்டுமொத்த காவல்துறையைக் குற்றம் சொல்வது முட்டாள்தனமானது. ஒருவர் பாலியல் குற்றம் செய்ததிற்காக ஒட்டுமொத்த ஆண்களையே பாலியல் குற்றம் செய்தவர்கள் என்று சொல்வது போல் உள்ளது. இந்த கொரோனா காலத்தில் எத்தனையோ காவல்துறையினர் கடும் வெயிலும் பணிபுரிந்து வருகிறார்களே அவர்களுக்கு மதிப்பு கிடையாதா.

திரையரங்கை மிஸ் பண்ணுகிறீர்களே…

கண்டிப்பாக ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். நாங்கள் படம் பண்ணுவதே திரையில் காண்பதற்காக தான். கைதட்டல்கள், சிரிப்பு சத்தம், விசில் சத்தம் என அனைத்துமே திரையரங்கில் தான் காண முடியும். அந்த அனுபவமே அலாதியானது. ஆனால், மாற்றம் மட்டுமே உறுதி. மக்களுக்காகத் தானே படம் பண்ணுகிறோம். அந்த விதத்தில் மக்களிடம் ‘டேனி’ படத்தைக் கொண்டு சேர்க்க ZEE 5 மூலம் வெளியிடுகிறோம்.

சம்பளக் குறைப்பு பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் குறைப்பீர்களா?

இங்கு எனக்கு சம்பளமே குறைவாகத் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கேள்வியை டாப் ஹீரோயின்களிடம் தான் கேட்க வேண்டும்.

காவல்துறையினருக்கு உங்களுடைய அட்வைஸ் என்ன?

நாம் காவல்துறையினரைக் குறை சொல்ல முடியாது. அதற்காக ஏன் ஒரு சட்ட வரையறைக் கொண்டு வர ஏன் முடியவில்லைஎன்று எனக்கும் புரியவில்லை. பாலியல் வன்புணர்வு செய்தால் மரண தண்டனை என்று ஒரு சட்டம் இருக்கிறது. அதை ஏன் நடைமுறைக்குக் கொண்டு வர ஏன் முடியவில்லை என்று இங்கு யாரிடம் கேட்பது எனத் தெரியவில்லை. விரைவில் நடைமுறைக்கு வரும் என்று நான் நம்புகிறேன். நமது நாட்டில் அனைத்துக்குமே சட்டங்கள் எழுதி வைத்துவிட்டார்கள். அதை நடைமுறைப்படுத்துவதில் தான் இங்குப் பிரச்சினை.

எப்போது திருமணம்?

எதையும் திட்டமிடவில்லை. நடக்க வேண்டிய நேரத்தில் நன்றாக நடக்கும்.

Related Articles

Janasena Party President, Pawan Kalyan thanks to Hon’ble CM of Tamil Nadu Shri Edapadi K Palanisamy

Naveen

Kollywood’s popular police stories – F’day spl. Article by Naveen

Naveen

Kani’s Oru Oorla Oru Raja – MoviePreview

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami