Movie Gallery

“இறுதிவரை வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எனது அதிகபட்ச ஆசை” – ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி

சில வருடங்களுக்கு முன்பு யூடியூபில் வைரலாக பரவிய குறும் படத்தின் மையக் கருவை அடிப்படையாகக் கொண்டு ‘நான் சிரித்தால்’ படத்தை உருவாக்கினோம். இதற்கு முன் வெளிவந்த ‘மீசைய முறுக்கு’ படத்திலும் யூடியூப் பிரபலங்கள் சிலருக்கு வாய்ப்புக் கொடுத்திருந்தோம். திறமை வாய்ந்த அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.

‘நட்பே துணை’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே எனக்கு ‘கெக்க பிக்க’ குறும்படம் மிகவும் பிடித்திருக்கிறது இதைத் திரைப்படமாக மாற்ற விரும்புகிறேன் என்று கூறினேன். ஒரு மாதத்தில் முழு கதையையும் எழுதி கொடுத்தார். அப்படித்தான் ‘நான் சிரித்தால்’ படம் உருவானது.

இப்படம் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் என்பதால் படத்தில் வலிமையான கருத்து இருக்க வேண்டும். குறும்படத்தை போல திடீரென்று ஆரம்பித்து உடனே முடித்துவிட முடியாது. ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு விளக்கம் கூறியாக வேண்டும். ஆகையால் தான் ‘நான் சிரித்தால்’ என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தேன். அது சரியானது என்று படத்தின் இறுதியில் தெரியும்.

‘நான் சிரித்தால்’ என்ற தலைப்பு நேர்மறையாக இருப்பதால் கொண்டாட்டமாக ஒரு பாடலை உருவாக்க நினைத்தோம். எதை கொண்டாடுவது என்று யோசிக்கும்போது கதைக்குள் வரும் பிரேக் அப்-பை வைத்து ‘பிரேக் அப்’ பாடலை உருவாக்கினோம்.

இப்படத்தில் நான் நகைச்சுவை கதாநாயகனாக நடித்து இருக்கிறேன். என்னுடன்
ஐஸ்வர்யா மேனன், ரவிக்குமார், ரவி மரியா, ‘பரியேறும் பெருமாள்’ மாரிமுத்து, ‘படவா’ கோபி, ‘எரும சாணி’ சாரா, முனீஷ்காந்த், என்று மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறார்கள். படம் முழுக்க நகைச்சுவை கலாட்டா வாகத்தான் இருக்கும்.

படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் காந்தி. அதில் தொடங்கும் ஒரு பாடல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அந்த பாடலை மையமாக வைத்துதான் கதை இருக்கும். முழுநீள காமெடி படம் என்பதால் என் கதாபாத்திரம் எதற்கெடுத்தாலும் சிரிப்பது என்று அமைந்திருக்கும். ஆனால், அதில் காந்த சக்தி இருக்கும்.

முதல் பாதியில் என் கதாபாத்திரத்தை எல்லோரும் கேலி செய்து சிரிக்கும்போது பார்ப்பவர்களுக்கு பரிதாபமாக இருக்கும். படம் முழுக்க எல்லோரும் சிரித்துக் கொண்டே இருக்கும் படி நகைச்சுவையாக இருக்கும். ஆனாலும், ஒரு வலிமையான கருத்து இருக்கும்.

மேலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக வெர்ட்டிகள் என்ற புதுமையான முறையை கொண்டு ‘பிரேக் அப்’ பாடலை உருவாக்கி இருக்கிறோம். எதிர் காலங்களிலும் வித்தியாசங்களையும் புதுமைகளையும் கொண்டு உருவாக்குவோம்.

‘நான் சிரித்தால்’ படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் ஒன்று நடிக்கிறேன். ஆகையால் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்று வருகிறேன். வீட்டிலேயே தனிப்பட்ட முறையில் பயிற்சியாளர் வைத்து கற்று வருகிறேன்.

எதிர்காலத்தில் பாரதியார் பாடல்களை வைத்து முழுநீள ஆல்பம் தயாரிக்க உள்ளேன். அதேபோல் பாரதிதாசன் கவிதைகளின் ஆல்பமாக உருவாக்க ஆசை உள்ளது. இவர்கள் மட்டுமல்லாது இன்னும் பெரிய கவிஞர்களின் படைப்புகளை தயாரிக்கும் வாய்ப்பு அமைந்தால் மகிழ்ச்சி அடைவேன்.

நான் கல்லூரியில் படிக்கும் போதே அவ்வப்போது மேடைகளில் பாடல்களைப் பாடி வருவது வழக்கம்.2011-ஆம் ஆண்டு தேர்தல் வந்ததால் அது குறித்து ‘எலக்ஷன் ஆன்தம்’ பாடினோம். இந்த நிகழ்ச்சிக்கு ஒருமுறை அண்ணா அசாரே வந்திருந்தார். வேறொரு மேடையில் பாடி முடித்து கீழே இறங்கியதும் காவல்துறையினர் நீங்கள் யார் என்று விசாரித்தார்கள். எங்கள் கல்லூரி அடையாள அட்டையை காண்பித்தோம். கல்லூரி மாணவர்கள் என்பதால் காவல்துறையினர் எதுவும் கூறவில்லை. அன்று நாங்கள் பாடிய ‘எலக்ஷன் ஆன்தம்’ சர்ச்சையை கிளப்பியது.

SS International இசைக்குழுவினர் பெரும்பாலும் கர்நாடக சங்கீதத்தை இசைப்பார்கள். முதல் முறையாக இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம் என்று எங்களுக்கு வாய்ப்பளித்தார்கள். நாங்கள் உணர்ச்சிவசப்பட்டு பாடியதில் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த பார்வையாளர்களும் உணர்ச்சிவசப்பட்டு நாற்காலியை தூக்கி போட்டு உடைத்து சேதம் விளைவித்தார்கள். அது முதல் எப்பொழுதெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு பாடுகின்றேனோ அப்போதெல்லாம் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு மாலில் ‘கோவை ஆன்தம்’ பாடும் போதும் நடந்தது. இது எனக்கு மட்டுமல்லாது ‘ராப்’ பாடகர்கள் அனைவருக்குமே நடக்கும்.

பொதுவாக சிறு கிராமத்தில் வசிப்பவர்கள் பெரு நகரத்திற்கு வரும்பொழுது அங்கிருக்கும் கலாச்சார மாற்றத்தைக் கண்டு அதிர்ச்சி அடைவார்கள். அது எனக்கும் நடந்தது. அதன்பிறகு படிப்படியாக சினிமாவுக்குள் நுழைந்தேன். இசையமைப்பாளர் ஆனேன். பிறகு கதாநாயகனாக நான் வளர்ந்தேன். முதல் படத்தில் இருந்து இயக்குனர் சுந்தர்.சி எனக்கு ஆதரவு அளித்து வருகிறார். இசையில் என்னை எதுவும் கேட்க மாட்டார். சுதந்திரமாக விட்டு விடுவார். சினிமாவைத் தாண்டி அவர் குடும்பத்தில் ஒருவனாக இருப்பதில் மகிழ்ச்சி.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பே முகநூலில் 1 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருந்தார்கள்.

இசை என்பது பொதுவாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது தான். இசைக்கும் விதம் தான் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப வேறுபடும். சினிமாவில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற நிலை இப்போது மாறியிருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் முன்னேறி கொண்டே செல்கிறார். இன்னும் மூன்று வருடங்களில் எங்கு பார்த்தாலும் ‘ராப்’ பாடல்கள்தான் அதிகம் இருக்கும்.

சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்ப காலக் கட்டத்தில் அனிருத்தை இரண்டு மூன்று இடங்களில் சந்தித்திருக்கிறேன். என் இசையில் அவர் பாடுவதற்கு வாய்ப்பு அமைந்தால் அவரைப் பாட வைப்பேன்.

‘டிக் டாக்’-கில் எனது பாடல்கள் வரும் போது எனது குழுவில் இருக்கும் இளைஞர்கள் எனக்கு தெரிவிப்பார்கள். அதில் எனக்கு மிகவும் பிடித்தது பாட்டியும் பேரனும் ‘டிக் டாக்’ செய்வதுதான்.

தற்போது நான் பி.எச்.டி. படித்து வருகிறேன். இறுதிவரை வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் இதன் அதிகபட்ச ஆசை. பொறியில் படிப்பவர்கள் பொறுப்பில்லாத வேலை கிடைக்காது என்று சினிமாவிற்காக சித்தரிக்கிறார்கள். ஆனால், ஒரு கல்லூரிக்கு செல்லும் போதும் அவர்கள் மிகவும் பொறுப்புடன் இருப்பதை காண்கிறேன். பொறியில் படித்தாலே ஒழுக்கம் என்பது தானாக வந்துவிடும்.

‘நான் சிரித்தால்’ படம் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது.

Related Articles

Catherine Tresa Latest Actress Gallery

Naveen

Seeru Movie Posters Gallery

Naveen

Raashi Khanna Actress Gallery 22

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami