Movie Gallery

கார்த்தியின் “கைதி” படத்தில் அரங்கம் அதிரும்  மாஸ் போலீஸாக கலக்கியுள்ள மரியம் ஜார்ஜ் பேட்டி.

ஜார்ஜ் மரியான் தமிழ் சினிமாவின் காமெடியன். சிறுசிறு துணைகதாப்பாத்திரங்களில் தலைகாட்டுபவர். ஆனால் இந்த தீபாவளியின் நாயகனாகியுள்ளார்.  “பிகில்”,  “கைதி” இரண்டு படங்களிலும் கலக்கியிருக்கிறார் . விஜய்யின் “பிகில்” படத்தில் சர்ச் ஃபாதராக கலக்கியிருகும் இவர் கார்த்தியின் “கைதி” படத்தில் அரங்கம் அதிரும் மாஸ் போலீஸாக கலக்கியுள்ளார்.

காமெடி, குணச்சித்திரம் இரண்டையும்  ஒருங்கே செய்யும் வெகு சில நடிகர்களில் ஒருவர் என “கைதி” இவரை அடையாளம் காட்டியுள்ளது. தற்போது இணையவாசிகளால் கொண்டாடப்படும் அவருடன் ஒரு சந்திப்பு…

கைதி படத்தின் வரவேற்பு எப்படியிருக்கிறது ?

நான் எதிர்பார்த்தத விட மிகப்பெரிய வெற்றி மக்கள் எல்லாம் கொண்டடுறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

கைதி படத்தில ஹீரோ மாதிரி மாஸ் காட்சிகள்ல நடிச்சிருக்கீங்க எப்படி இருந்தது அந்த அனுபவம் ?

லோகேஷ் கனகராஜ் சார் கதை சொல்லும்போதே இந்தப்படத்துல உங்களுக்கு முக்கியமான ரோல் சார். நல்லா வரும் பாருங்கன்னு சொன்னார். எல்லாப்படத்திலும் இப்படி தான் சொல்லுவாங்க, எல்லாப்படம் போல தான் இந்தப்படத்திலும் வேலை பார்த்தேன். ஆனா இப்ப பெரிய வெற்றிப்படமா அமைஞ்சிடுச்சு. இந்த டீமே பிரமாதாமான டீம். நல்ல திரைக்கதை, கார்த்தி சார் மிரட்டிட்டாரு.

நரேன் சார் நல்லா நடிச்சிருக்காங்க. சத்யனோட கேமரா இருட்டுல பிரமாதாமா வேலை பார்த்திருக்கு. எல்லோருமே கடுமையான உழைப்ப கொடுத்திருக்காங்க இப்படி ஒரு வெற்றிப்படத்தில நானும் ஒரு அங்கமா இருக்கறதுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்.

இப்ப இணையம் முழுக்க பாராட்டுறாங்க, நெப்போலியன் கேரக்டர் பத்தி எல்லோரும் பேசுறாங்க, சொந்தக்காரங்க எல்லாரும் சூப்பரா பண்ணிருக்கீங்கனு சொன்னாங்க ரொம்ப சந்தோஷமா இருந்தது.

காமெடில இருந்து மாஸ் போலீஸா மாறியிருக்கீங்க எப்படி இருக்கு ?

ஆமா, ஆமா இதுவரைக்கும் காமெடியாதான் நடிச்சிருக்கேன். சுந்தர் சி சார் படங்கள்ல காமெடி போலீஸா நடிச்சிருக்கேன்  எல்லோரும் கொண்டாடுவாங்க. நம்மள பார்த்து சிரிப்பாங்க. தடம் படத்தில தான் முதல் முறையா மகிழ் திருமேனி சார் கொஞ்சம் சீரியஸான ரோல் தந்தாரு. ஆனா கைதில ரொம்பவும் கனமான கதாபாத்திரம். எனக்கே கொஞ்சம் சந்தேகம் இருந்தது. என்னடா மக்கள் இதுவரைக்கும் நம்மள காமெடியனதான் பார்த்திருக்காங்க இதுல இவ்வளவு சீரியஸான பாத்திரத்தில எப்படி ஏத்துப்பாங்க சிரிச்சிட்டா தப்பாயிடுமேனு  யோசிச்சேன். ஆனா லோகேஷ் சார் தான் தைரியம் தந்தார் பண்ணுங்க சார் மக்கள் ஏத்துப்பாங்கனு சொன்னார். அவருக்கு கதை மேல பயங்கர நம்பிக்கை. அவர் கொடுத்த தைரியத்தால் தான் பண்ணினேன். காமெடில இருந்து  நம்மள இப்படிபட்ட  பாத்திரத்தில மக்கள் ஏத்துகிட்டதே பெரிய சந்தோஷம் தான்.

கார்த்தியோட நடிச்ச அனுபவம் ?

கார்த்தி சாருக்கும்  எனக்கும் படத்தில கடைசில தான் ஸீன் வரும். க்ளைமாக்ஸ் மட்டும் தான். அதுவும் பயங்கரமா வந்திருக்கு. அதுவரைக்கும் அவர் கதை தனியா நடக்கும். கார்த்தி சார் நடிப்பில பிரமாதப்படுத்தியிருக்கார். லாரி ஓட்டுறது எல்லாம் அவ்வளவு ஈஸி கிடையாது ஆனா அவரே தான் படம்முழுக்க ஓட்டியிருக்கார். பின்னிட்டார். என்னுடைய காட்சி முழுக்க கமிஷ்னர் ஆபிஸ் தான் நல்லா பண்ணிருக்கேன்னு நினைக்கிறேன். க்ளைமாக்ஸ்ல நாங்க ரெண்டு பேரும் வருவோம். கார்த்தி சார் தன்னோட வேலையில சரியா இருப்பார்.

எல்லோருமே அருமையா வேலை பார்த்திருக்காங்க. கேமராமேன் சத்யன் செய்திருப்பது எல்லாம் பிரமிப்பான வேலை. இரவுல ஷீட் பண்ணுறது மிகப்பெரிய கஷ்டம் அதுவும் அவுட்டோர்ல எவ்வளவு லைட்டா வைக்க முடியும் சொல்லுங்க,  ஆனா படம் பார்க்கும் போது அற்புதமா ஒரு ஆங்கில படம் மாதிரி வந்திருக்கு. அதே மாதிரி ரீ ரிக்கார்டிங் சாம் சி எஸ் பின்னிட்டார். ஒரு பாட்டில எரிஞ்சா அது எங்க விழுது, எது மேல விழுதுங்கிற மாதிரி சவுண்ட் கரெக்டா வந்திருக்கு. மக்கள் எல்லாத்தையும் உன்னிப்பா பார்த்து பாராட்டுறாங்க

படம் பார்த்து கார்த்தி சார் கூப்பிட்டு பாராட்டுனாரு அவருக்கு பெரிய மனசு.

கூத்துப்பட்டறை மூலமா சினிமாவுக்கு வந்தவர் நீங்கள், அந்த அனுபவம் பத்தி சொல்லுங்களேன் ?

1990 களிலேயே நான் கூத்துப்பட்டறைல சேர்ந்துட்டேன். நான், பசுபதி, ஜெயக்குமார், கலைராணி, இப்படி நிறைய பேர். பசுபதி, கலைராணி சீக்கிரமே சினிமாவுகுள் வந்துட்டாங்க, நான் பத்து வருஷமா அங்க தான் நாடகங்கள்ல நடிச்சிட்டு இருந்தேன். நாசர் சார் தான் அவரோட ‘மாயன்’ படத்தில அறிமுகப்படுத்தினார். அவர் மூலம்தான் சினிமாவுக்கு வந்தேன். பசுபதியும் அவர் மூலமாதான் கமல் சாருக்கு அறிமுகமாகி வில்லனா நடிக்க ஆரம்பிச்சார். எனக்கு இப்போது தான் ஒரு அங்கீகாரம் கிடைச்சிருக்கு.

காஞ்சீவரம் உங்களுக்கு ஒரு அடையாளமாக இருந்ததே அதைப்பற்றி ?

அந்தப்படத்தில் என்னை பலரும் அடையாளம் கண்டு சொன்னார்கள். அந்தப்படத்தில் பிரியதர்ஷனிடம் அஸிஸ்டெண்டாக ஏ எல் விஜய் சார் வேலை பார்த்தார். அவர் தான் என்னை அந்தக்   கதாபாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்தார். அப்போது ஏற்பட்ட பழக்கம் அவர் படங்களில் எனக்கு வாய்ப்பு தருவார்.

“பொய் சொல்லப் போறோம்” எனக்கு முக்கியமான படம். அதன் கதையே நாடகம் போட்டு ஏமாற்றுவது மாதிரி நாசர் சாரும் நானும் நடிச்ச காட்சி எல்லோருக்கும் பிடித்திருந்தது. நாசர் சார் முன்னமே எனக்கு பழக்கமென்பதால் அந்தக்காட்சியில் நன்றாக நடிக்க முடிந்தது. அவரும் மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்தார். கூத்துப்பட்டறை நடிகர்களை அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். அதைத்தொடர்ந்து ஏ எல்  விஜய் சாரின் மதராஸப்பட்டினம், சைவம் என எனக்கு எல்லாமே நல்ல ரோல்கள்.

சுந்தர் சி படங்களிலும் உங்களை அதிகமாக பார்க்க முடிகிறதே ?

அவருக்கும் என்னை ரொம்பவும் பிடிக்கும் இப்படி பண்ணுடா என உரிமையோடு சொல்வார் கலகலப்பு, கலகலப்பு 2 ரெண்டிலுமே மக்கள் ரசிக்கும்படியான கேரக்டர் கலகலப்பு 2 வில் அந்தப் படகு காட்சியில் நானே தான் படகு ஓட்டினேன். நாடகங்களில் நடித்த போது பலவற்றையும் கற்றுக் கொண்டேன். நான் செய்யும் பாத்திரங்களில் உண்மையாக இருப்பேன். நாமே செய்ய வேண்டும் என நினைப்பேன். அந்தக்காட்சியில் ராதாரவி சாரும் பெரிய ஒத்துழைப்பு தந்தார். மக்களும் அந்தக்காட்சியை பெரிதாக ரசித்தார்கள்.

தீபாவளிக்கு விஜய்யின் பிகில் படத்திலும் நடித்திருந்தீர்களே அந்த அனுபவம் பற்றி ?

விஜய் அருமையான நடிகர். அவரை திட்டுவது போல் ஃபாதர் கேரக்டர் எனக்கு ,  கொஞ்சம் பயமாகிவிட்டது. அவரிடம் முன்னமே கேட்டேன் சார் இந்த
மாதிரி தப்பா எடுத்துக்காதீங்க என்றேன். அவர் அதெல்லாம் ஒன்றுமில்லை இது காட்சிதான் நீங்கள் நன்றாக செய்யுங்கள் என்றார். எனக்கு கூச்சம் போக காட்சி எடுக்கும் நேரத்தில் எங்களுடனே தான் இருப்பார் எங்களுடன் தான் சாப்பிடுவார்.அவ்வளவு எளிமை. பிகிலில் நடித்தது பெரும் சந்தோஷம்.

அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்தீர்களே அவர் எப்படி ?

அவரும் பெரும் அன்பானவர். தோளில் கைபோட்டு கட்டிப்பிடித்துக் கொள்வார். என்ன படமெல்லாம் நடிக்கிறேன் என விசாரிப்பார். படம் முடிந்த போது யூனிட்டுக்கே அவர் கையால் சமைத்து பிரியாணி செய்து தந்தார். அவருடன் நடித்தது மகிழ்ச்சியே.

தமிழ் சினிமாவில் எல்லோருடனும் நடித்திருக்கிறீர்கள் இன்னும் எந்த ஹீரோவுடன் நடிக்க ஆசை ?

அப்படி எதுவும் இல்லை இதுவரைக்கும் எல்லாப்படத்திலும் சின்ன சின்ன கதாப்பாத்திரங்கள் தான் செய்திருக்கிறேன் பெரிய கதாப்பாதிரங்கள் செய்யும் ஆசை இருக்கிறது. இப்போது ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் இன்னும் நிறைய செய்ய ஆசை.

கைதி பார்த்து விட்டு உங்கள் குடும்பத்தில் என்ன சொன்னார்கள் ?

படம் எடுக்கும்போதே லோகேஷ் சொன்னார். அண்ணா வீட்டில் இப்போது எதுவும் சொல்லாதீர்கள் படம் வந்த பிறகு கூட்டிப்போங்கள் என்றார். தீபாவளிக்கு படத்திற்கு குடும்பத்தை கூட்டிப்போனேன் என் பையனும், மகளும் ஆச்சர்யப்பட்டார்கள். அப்பா என்ன இவ்வளவு பெரிய ரோலில் நடித்திருக்கிறீர்கள் சொல்லவே இல்லையே என்றார்கள். அவர்களின் நண்பர்கள் எல்லாம் உங்கள் அப்பா பிரமாதமாக நடித்திருப்பதாக பாராட்டியிருக்கிறார்கள் அவர்கள் சொல்லிக்கொண்டே இருந்தார்கள் இதை விட வேறென்ன வேண்டும். சினிமாவில் வந்து இத்தனை வருடத்தில் மிகப்பெரிய சந்தோஷம் இது தான்.

அடுத்து  நீங்கள் நடித்துக்கொண்டிருக்கும் படம் பற்றி ?

சமுத்திரகனியின் அடுத்த சாட்டை படத்தில் ஒரு ரோல் பண்ணிருக்கேன் தம்பி ராமையாவும் நானும் சேர்ந்து பண்ணிருக்கோம். பிழை படத்தில் ஒரு ரோல் பண்ணிருக்கேன். இப்போ பெரிய வாய்ப்பு ஒன்னு ஷங்கர் சாரோட இந்தியன் 2 ல ஒரு கதாப்பாத்திரம் பண்றேன். கைதி ஒரு பிள்ளையார் சுழி மாதிரி,  நமக்கு இனி எல்லாம் நல்லா நடக்கணும்.

ரசிகர்களுக்கு என்ன சொல்ல விருப்பம் ?

தியேட்டர்ல போய் படம் பாருங்க. நல்ல படத்த ஆதரீங்க . எங்கள போன்றவர்களையும் பாராட்டுங்க அவ்வளவு தான்.

Related Articles

Election Entertainers of Kollywood – F’day Spl. article by Naveen

Naveen

படமாகிறது  நயன்தாரா – விக்னேஷ்சிவனின்  காதல்

Naveen

High Court slams TN govt in Vishal issue

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami