Political News

பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரம் பேபி சரோஜா மரணம் !

தமிழ் சினிமாவின் முதல் குழந்தைகளுக்கான திரைப்படமாக வெளியான படம் 1937 ல் வெளியான “பாலயோகினி”

இப்படத்தின் மூலம் ஐந்து வயது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் பேபி சரோஜா.

1931 ல் சென்னையில் மிகப்பெரிய தேசபக்தி மிக்க, கலைக்குடும்பத்தில் பிறந்தவர் பேபி சரோஜா.

இவருடைய தந்தையார் கே.விஸ்வநாதன். இவர் தமிழ் சினிமாவின் முதல் புரட்சி இயக்குனர் கிருஷ்ணசாமி சுப்ரமணியம் ( கே.சுப்ரமணியம் )
அவர்களின் சகோதரர்

பாப்பநாசம் சிவம் திரைக்கதையில் கே.சுப்ரமணியம் இயக்கிய ” பாலயோகினி ” திரைப்படம் மூலம் ஐந்து வயது குழந்தை பேபி சரோஜா அறிமுகம் ஆனார்.

பக்திப் படங்கள், புராணப் படங்கள், சமூகப் படங்கள் வரும் காலகட்டத்தில் முதலில் வந்த குழந்தைகள் படம் கே.சுப்ரமணியம் உருவாக்கிய ” பாலயோகினி ” படம்தான்.

இப்படத்தில் அவருடைய நடிப்பு, சொந்த குரலில் பாடும் பாடல்கள் அவரை ஒரே படத்தில் புகழின் உச்சியில் கொண்டு சென்றது.

அன்றைய ஹாலிவுட் பட உலகின் உலகப்புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரமாக விளங்கியவர் ஷர்லி டெம்பிள் ஆவார்.

பேபி சரோஜாவை அனைவரும் இந்தியாவின் ஷர்லி டெம்பிள் என்று அழைத்தனர்.

அந்த படம் வெளியான பின்பு பிறந்த பல பெண் குழந்தைகளுக்கு சரோஜா என்றே பெயர் வைத்தனர்.

சரோஜா மை, சரோஜா பவுடர், சரோஜா சாந்து, சரோஜா வளையல் என்ற எட்டு திக்கும் சரோஜா பெயரே பேசப்பட்டது.

இதைத் தொடர்ந்து கல்கி எழுதிய ” தியாக பூமி ” படத்தை இயக்கினார் கே.சுப்ரமணியம்.

” தியாக பூமி ” திரைப்படம் 1939 மே மாதம் 20 ஆம் தேதி வெளியானது.

தேசபக்தி மிக்க இப்படம் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டது.

கே.டி.மகாதேவன், எஸ்.டி.சுப்புலட்சுமி இணைந்து நடித்த இப்படத்தில் பேபி சரோஜாவையும் நடிக்க வைத்தார் கே.சுப்ரமணியம்.

இதில் கதாநாயகியாக நடித்த எஸ்.டி.சுப்புலட்சுமி இயக்குனர் கே.சுப்ரமணியத்தின் மனைவியாவார்.

தமிழ் சினிமாவில் பிரிட்டிஷ் இந்திய ஆட்சி காலத்தில் நம்முடைய தேசியக் கொடியை திரையில் காட்டிய முதல் புரட்சி இயக்குனர் கே.சுப்ரமணியம் அவர்களே.

தடைகளைத் தாண்டி தேசபக்தி மிக்க திரையரங்கு உரிமையாளர்கள் ஒன்று கூடி அவருக்கு ஆதரவு தந்தனர்.

தேசபக்தி குமுகத்தில் பிறந்த பேபி சரோஜா பற்றி பல பரபரப்பான செய்திகள் உள்ளன். அதில் ஒன்று…

துணிப்பைகள், நோட்டுப் புத்தகங்கள் என எல்லாவற்றிலும் பேபி சரோஜாவின் படம் அச்சிடப்பட்ட சமயத்தில் ஒரு வர்தக நிறுவனம் வெளிநாட்டு உற்பத்தியான குளிக்கும் சோப்பிற்கு ” சரோஜா சாண்டில் ” என்று பெயர் வைத்து விளம்பரப் படுத்தியது.

அந்த சோப்பை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்கள் அந்நிய நாட்டு பொருட்களை நாம் ஊக்குவிக்க கூடாது என்று சொன்னதைப் பின்பற்றி, அந்த வெளிநாட்டு வர்தக நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்து, அந்த சோப்பின் மீது இருந்த பெயரையும், படத்தையும் நீக்கச் செய்த தேசபக்தி மிக்க குடும்பம் இவரது குடும்பம்.

பிரபல இசையமைப்பாளர் எஸ்.ராஜேஸ்வர்ராவ் இசையில், நந்தில் ஜஸ்வந்லால் இயக்கியப் படம் 1941 ல் வெளியான ” காமதேனு ” திரைப்படம்.

பேபி சரோஜா நடித்த மூன்றாவது படம் இதுவே. அதன் பின்பு அவர் நடித்ததாக தெரியவில்லை.

ஆனால் மூன்றே படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரிட்டிஷ் இந்தியாவின் புகழ்பெற்ற முதல் குழந்தை நட்சத்திரம் என்ற பெயர் பெற்றவர் இவரே.

ஈ.வி.சரோஜா, எம்.சரோஜா, பி.எஸ்.சரோஜா ( இவர் பிரபல இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா அவர்களின் மனைவி, பிரபல நடிகை டி.ஆர்.ராஜகுமாரி அவர்களின் நாத்தநார் ) சரோஜா தேவி, என எத்தனை சரோஜாக்கள் வந்தாலும், தமிழ் சினிமாவின் புகழ் உச்சியை அடைந்த முதல் சரோஜா இந்த பேபி சரோஜா மட்டுமே.

88 வயதில் சென்னையில் வசித்து வந்த அவர் இரண்டு தினங்களுக்கு முன்பு அதாவது 14 – 10 – 2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.

காலத்தால் அழியாத மூன்று படங்களில் நடத்த இவருடைய மறைவைவிட வேதனையான விஷயம் என்னவென்றால், நடிகர் சங்கம் உட்பட யாருமே இவருடைய மறைவை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பதே.

சமீபத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் பிறந்தநாளுக்கும் இதே நிலைதான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

*மறைந்த ” பேபி சரோஜா ” அம்மா அவர்களின் நினைவைப் போற்றுவோம்.

தோழமையுடன்
டி.எஸ்.ஆர்.சுபாஷ்
திரைப்பட எடிட்டர்

Related Articles

More and more Cong leaders praise Narendra Modi

Naveen

Stop terror to start talks: India tells Pakistan

Naveen

“Doctors should end strike, resume work or else posts will be considered vacant:”Health Minister C Vijaybhaskar.

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami