Celebrity Events

D.N.C. Chits வழங்கும் மெல்லிசை மன்னரை “நினைத்தாலே இனிக்கும்”

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசைவிழா

                                                     D.N.C. Chits வழங்கும்

மெல்லிசை மன்னரை

“நினைத்தாலே இனிக்கும்”

Powered by Sakthi Masala

அன்பு நண்பர்களுக்கு லஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவின் பணிவான வணக்கங்கள்.

தமிழ் திரைப்பட வரலாற்றில் காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான தேனினும் இனிய பாடல்களை வழங்கி மெல்லிசை மன்னராக நமது இதய சிம்மாசனத்தில் நிரந்தரமாய் வீற்றிருக்கும் இசை மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு…. வரும் ஜூலை 7ஆம் தேதி ஞாயிறன்று மாலை 4.15 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில், மெல்லிசை மன்னரை “நினைத்தாலே இனிக்கும்” என்ற தலைப்பில் மிகப் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

முழுவதும் எம்.எஸ்.வி. அவர்களின் இசையமைப்பில் உருவான அதியற்புதமான பாடல்களை, எமது “லஷ்மன் ஸ்ருதி” இசைக் குழுவின் சார்பாக வழங்க உள்ளோம்.

இந்நிகழ்ச்சியில் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுடன், இசை மாமேதை டி.எம்.செளந்தரராஜன் அவர்களின் புதல்வர் டி.எம்.எஸ்.செல்வக்குமார், பிரபல பாடகர்கள் ஸ்ரீநிவாஸ், மதுபாலகிருஷ்ணன், முகேஷ், மாலதி லஷ்மண், கல்பனா, ப்ரியா ஹிமேஷ், சின்னத்திரை புகழ் சுசித்ரா பாலசுப்ரமணியம், ப்ரியங்கா, ஸ்ரீநிதி, வர்ஷா ஆகியோர் பங்கேற்று மெல்லிசை மன்னரின் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.

சிறப்பு விருந்தினர்களாக மரியாதைக்குரிய பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மெல்லிசை மன்னரின் புகழ் பாட உள்ளனர்.

எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் தனது இசைக் கோர்ப்பின்போது ஒலிப்பதிவில் பயன்படுத்திய இசைக்கருவிகளான….

ஹார்மோனியம், பியானோ, வீணை, சித்தார், சாரங்கி, சந்தூர், புல்லாங்குழல், சாக்ஸஃபோன், க்ளாரினெட், மெளத் ஆர்கன், ஷெனாய், நாதஸ்வரம், வயலின், வியாலோ, செல்லோ, டபுள் பேஸ், அக்கார்டியன், கிட்டார், மேண்டலின், ட்ரம்பட், ட்ராம்போன், யூஃபோனியம், ஃப்ரெஞ்ச் ஹார்ன், பேங்கோஸ், காங்கோ, தவில், மிருதங்கம், கடம், கஞ்சிரா, டேப், தபேலா, ட்ரம்ஸ், தும்பா, ரோட்டோ ட்ரம்ஸ், துந்தனா, பம்பை உடுக்கை, உருமி, செண்டை, டோலக், டோல்கீ, கோல், கடசிங்காரி, நகரா, பக்வாஜ்

போன்ற பெரும்பான்மையான இசைக்கருவிகளை இந்நிகழ்ச்சியில் பயன்படுத்தி, மெல்லிசை மன்னரின் சாகாவரம் பெற்ற, சரித்திரம் படைத்த பாடல்களை ரசிகர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் இசைவிருந்து படைக்க இருக்கின்றோம்.

உலகம் முழுவதுமுள்ள தமிழ் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்துள்ள ஐயா அவர்களை போற்றி கெளரவிக்கும் விதமாக நடைபெற உள்ள இந்த இசை விழாவில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பங்கேற்று இன்புற வேண்டும் என “லஷ்மன்ஸ்ருதி” இசைக்குழு சார்பில் உங்கள் அனைவரையும் வரவேற்கின்றோம். இந்நிகழ்ச்சி குறித்த தகவலை சமூக வலைத்தளங்களின் மூலமாக அனைவருக்கும் பகிர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

மெல்லிசை மன்னரின் இசைப் பயணத்தில்….

எம்.எஸ்.விஸ்வநாதன் (மனயங்கத்து சுப்பிரமணியன் விசுவநாதன்)
என்ற எம்எஸ்வி, இளம் வயதிலேயே நீலகண்ட பாகவதரிடம் கர்நாடக இசையை முறைப்படி கற்று, தேர்ச்சிப் பெற்று, தனது 13 வது வயதிலேயே மேடை நிகழ்ச்சிகள் நிகழ்த்திய பெருமைக்குரியவர்.

அன்று துவங்கிய அவரது இசைப்பயணம், சுமார் ஆறு தசாப்தங்களாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஹிந்தி என அனைத்து இந்திய மொழிகளிலும் 1000 திரைப்படங்களுக்கும் மேலாக இசையமைத்துள்ளார்.

எம்.எஸ்.வி அவர்கள் இசையமைத்து இன்றும் நாம் அனைவரும் பெருமையுடன் பாடிக்கொண்டிருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தான ”நீராருங்கடலுடுத்த” பாடல் அவரது பெருமையை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பறைசாற்றும்.

எம்எஸ்வி, 1953ம் வருடத்தில் வெளியான ‘மக்கள் திலகம்’ எம் ஜி ஆரின் ‘ஜெனோவா’ திரைப்படத்தின் நான்கு பாடல்களுக்கு இசையமைத்து, தனது திரையுலக இசைப்பயணத்தை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘செவாலியே’ சிவாஜி கணேசன் அவர்களால் வழங்கப்பட்ட ‘மெல்லிசை மன்னர்’ என்ற பட்டத்திற்கு உதாரணமாக இசைத்துறையில் மெல்லிசை மன்னராகவே வாழ்ந்து காட்டியவர்.

மக்கள் திலகம், நடிகர் திலகம் என தமிழ் திரையுலகின் ஈடு இணையற்ற இரண்டு ஆளுமைகளின் திரைப்படங்களுக்கு ஒரே சமயத்தில் இசையமைத்து இருவரது ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டிய நெருக்கடியை மிக சுலபமாக சமாளித்து சாதித்துக் காட்டியவர் எம்.எஸ்.வி. அதைத் தொடர்ந்து கமல்ஹாசன், ரஜினிகாந்த் என்ற இரண்டு உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களிலும் தனது தனி முத்திரையைப் பதித்து இசை மழை பொழிந்திருக்கிறார்.

கே.பாலச்சந்தர், ஸ்ரீதர் போன்ற இயக்குநர்களின் கற்பனை வளத்துக்கு இசை வடிவம் கொடுத்ததில் மெல்லிசை மன்னரின் பங்களிப்பு பிரமிக்க வைப்பதாக உள்ளது. ஏவிஎம், ஜெமினி, விஜயா வாஹினி உட்பட பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து தங்களின் திரைப்படங்களுக்கு மெல்லிசை மன்னரை ஒப்பந்தம் செய்ததே அவரது திறமைக்கும், அர்ப்பணிப்புக்கும் சாட்சியாக உள்ளன.

நாணம், நகைச்சுவை, அச்சம், வெறுப்பு, சாந்தம், வியப்பு, கருணை, கோபம், வீரம், காதல், மகிழ்ச்சி, அன்பு, சோகம், பாசம், பரவசம், பிறப்பு, இறப்பு, தாய்மை, தனிமை, நட்பு, போட்டி, எழுச்சி, நாட்டுப்பற்று, நையாண்டி என மனித உணர்வுகள் அத்தனையையும் தனது பாடல்களில் பிரதிபலித்தது மட்டுமின்றி, பல விதமான கதை களங்களை மையமாகக் கொண்டு உருவான திரைப்படங்களுக்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் உயிரூட்டியவர்.

ஏழை, பணக்காரன், படகோட்டி, விவசாயி, ரிக்ஷாக்காரர், மருத்துவர், நரிக்குறவர், வழக்கறிஞர், சர்க்கஸ் கலைஞர், குதிரைவண்டிக்காரர், நாடகக்கலைஞர், நாட்டியக்கலைஞர், வளையல் வியாபாரி, விகடகவி, தாயத்து விற்பவர், ஓட்டுநர்கள், பிரசங்கி, போதகர், அர்ச்சகர், ஆசிரியர், மாணவர், பூட்டு வியாபாரி, விமானி, பூக்காரி, மாற்றுத்திறனாளி, மனநலம் குன்றியவர், சுமை தூக்குவோர், அரசியல்வாதி, ராணுவ வீரர், தேசத்தியாகி மற்றும் பல்துறை தொழிலாளிகள் மட்டுமல்லாது கிராமம், நகரம், வெளிநாடுகள் என கதைக்களத்துக்கேற்ப மனிதர்கள் மற்றும் நிகழ்விடங்களின் தன்மையை முழுவதுமாக உள்வாங்கி அதற்கேற்ற இசையை வழங்குவதில் தன்னிகரற்றவராக விளங்கினார்.

திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு இவர் இசையமைத்த கொள்கை விளக்கப் பாடல்கள் இன்றளவும் தொண்டர்களின் அபிமான பாடல்களாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

அனைத்து மதங்களுக்குமான தனித்தன்மையுடன் கூடிய பக்திப் பாடல்களும் மெல்லிசை மன்னரின் புகழுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.

மெல்லிசை மன்னரின் வெண்கலக் குரலில் நூற்றுக்கணக்கான பாடல்கள் நம்மைக் கவர்ந்திருந்தாலும், ”கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தில் இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் அவர் பாடிய ”விடைகொடு எங்கள் நாடே” பாடல், கேட்கும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு முறையும் உள்ளத்தை உலுக்கி, உதிரத்தை உருக்கி, விழிகளில் நீர்பெருக்கி, நாடி நரம்புகளையெல்லாம் சோகம் இழையோட வைக்கும்.
தன்பூமி விட்டு வெளிபூமிக்கு புலம்பெயரும் மனிதர்களின் எதிர்காலத்தைப் பற்றிய ஆயிரமாயிரம் கேள்விகளை அவரது ஒற்றைக்குரல் அச்செடுத்துக் கொடுக்கும் அதிசயம் கேட்பவர்களுக்குப் புரியும்.

கவியரசு கண்ணதாசனின் மனங்கவர்ந்த இசையமைப்பாளர் என்ற பெருமையும் மெல்லிசை மன்னருக்கே.

கவிஞர் வாலி அவர்களின் வரிகளுக்கு இறவா வரம் கொடுத்தவரும் இவரே.

இந்த இரு யுகபுருஷர்களின் வரிகளைத்தாண்டி அவருடன் பணியாற்றிய அத்தனைக் கவிஞர்களின் வரிகளையும் உதட்டுச் சாயமாய் அல்லாமல் உதட்டுக்குள் உள்ளிருக்கும் உதிரத்திற்குள் கலந்து விட்டவர்.

இசைமேதை எம்எஸ்வி அவர்களுடன் சமகாலத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், அவரது இசையில் பாடிய பின்னணிப் பாடகர்கள், பாடகிகள், திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் தொழிட்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் இணைந்து, இன்றைய தலைமுறை நடிக-நடிகையர், பாடக-பாடகியரும் கலந்து கொண்டு இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியினை சிறப்பிக்க இருக்கிறார்கள்.

டி.வி.கே.கல்சுரல் மற்றும் விசாகா மீடியா இணைந்து வழங்கும் ‘நினைத்தாலே இனிக்கும்’ எனும் இவ்வரிய இசை நிகழ்ச்சிக்கு அனைவரும் வருகை தந்து, சிறப்பித்து, நிகழ்ச்சி வெற்றியடைய அன்புடன் அழைக்கிறோம்.

இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் : www.bookmyshow.com,
www.lakshmansruthi.com, www.ticketnew.com, www.insider.in ஆகிய
இணைய தளங்கள், வடபழநி ‘லஷ்மன்ஸ்ருதி’ இசைக்கருவிகள் விற்பனையகம் மற்றும் ‘நாயுடு ஹால்’ கிளைகளான தியாகராய நகர், அண்ணாநகர், முகப்பேர், அம்பத்தூர், வளசரவாக்கம், வேளச்சேரி தாம்பரம் ஆகியவற்றில் கிடைக்கும். மேலும் தொடர்புக்கு: 77088 61500 / +91-44-4287 4044

“நினைத்தாலே இனிக்கும்” நிகழ்ச்சிக்கான ஆதரவாளர்கள்:

Dinamalar, Bharat University, Hotel Accord, Sri Bagyalakshmi Tours & Travels, Kumudam, Suryan FM, Sri Kaliswari Fire Works, Madras City Properties.com,
VKM Caterers, Madura Travels Services (P) Ltd., AdFarm, , Galatta.com,
Sri Kaliswari College – Sivakasi, Valaitamil.com, Mega Digital

Related Articles

“Anniversary of late Dr.Ishari Velan” Event stills & News

Naveen

“Kattil” Movie Launch Pooja Stills

Naveen

Actress Yashika Anand launched Easybuy’s 12th Store in Tamilnadu at Ambattur

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami