தற்போது அனைத்து மீடியாக்களிலும் சரி, பத்திரிக்கைகளிலும் சரி பரபரப்பாக பேசப்படும் முக்கியமான விஷயம் என்னவென்றால் கவிஞர் வைரமுத்து-பாடகி சின்மயி பாலியல் பற்றிய விவகாரம்தான். இதுகுறித்து தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். ’அருமை சகோதரி பின்னணிப் பாடகி சின்மயி, ஆறு முறை தேசிய விருது, கலைமாமணி விருது போன்ற பல விருதுகளைப் பெற்ற கவிப்பேரரசு மீது, சில குற்றசாட்டுகளை கூறி வருகிறார்.
இதனைக் கேட்டு எத்தனையோ தமிழர்கள் மனம் புண்பட்டு வேதனைப்படுகிறார்கள். பல உதவி இயக்குனர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு, ‘சார் தவறான விஷயங்கள் எது நடந்தாலும் நீங்கள் குரல் கொடுப்பீர்கள். வைரமுத்து மீது சின்மயி தவறான குற்றசாட்டுகளை கூறியிருப்பதைப்பற்றி நீங்கள்தான் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்’ என்று வற்புறுத்தினார்கள். எனக்கு வைரமுத்துவிடம் அதிக பழக்கம் கிடையாது. இருந்தாலும் ஒரு தமிழன் என்ற முறையில், அவர் காயப்படுத்தப்படுகிறாரோ அல்லது புண்படுத்தப்படுகிறாரோ அவரது ஒழுக்கத்தின் மீது களங்கம் சுமத்துகிறார்களோ என்ற கேள்விதான் எழுகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த ஒரு விஷயத்தை, தற்போது சின்மயி பூதாகரமாக உருவாக்கி, கவிபேரரசு மீது வீணான ஒரு பழியை சுமத்தியிருக்கிறார்.
இப்போது கூறுகிற இந்த விஷயத்தை அப்போதே புகார் கொடுத்து இருக்கலாம் அல்லவா? அதன் பிறகு பல விழாக்களில் அவருடன் கலந்துக் கொண்டு இருக்கின்றீர்கள். உங்களது திருமணத்திற்க்கும் அவர் வந்திருந்து ஆசி வழங்கி இருக்கிறார். ஆனால் என்ன காரணத்திற்க்காக இத்தனை ஆண்டுகள் கழித்து அவர் மீது வீணாக ஒரு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஏன் இவ்வளவு கால தாமதம். அவர் தவறு செய்து இருந்தால் அப்போதே கண்டித்து இருக்கலாம். ஆனால் பல ஆண்டுகள் கழித்து கவிபேரரசு மீது களங்கம் ஏற்படுத்துவது ஏன்? ஆகவே சகோதரி சின்மயி இத்துடன் இந்த விஷயத்தை கைவிட வேண்டும் என் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.